நெல்லை அருகே பயங்கரம்: பெண் கொடூரக்கொலை

நெல்லை அருகே பெண்ணை கொடூரமாக கொன்று உடலை ரெயில் தண்டவாளத்தில் வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-12-27 21:30 GMT
நெல்லை, 

நெல்லை அருகே பெண்ணை கொடூரமாக கொன்று உடலை ரெயில் தண்டவாளத்தில் வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தண்டவாளத்தில் பிணம்

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் ரெயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் நேற்று காலை பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜூலியட் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு தண்டவாளங்களுக்கு இடையே ஒரு பெண் பிணமாக கிடந்தார். அந்த பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொடூரக்கொலை

பிணமாக கிடந்த பெண்ணுக்கு சுமார் 45 வயது இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. பிணம் கிடந்த இடத்தின் அருகே சாக்குப்பை ஒன்று கிடந்தது. அந்த பெண்ணின் கழுத்தை இறுக்கிய தடமும், நெஞ்சில் வெட்டு காயமும் இருந்தது.

எனவே, அந்த பெண்ணை யாரேனும் வேறு இடத்தில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்து இருக்கலாம் என்றும், பின்னர் உடலை சாக்குப்பையில் வைத்து தூக்கி வந்து ரெயில் தண்டவாளத்தில் வீசிச்சென்று இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது தெரிந்தால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும். இதனால் அந்த பெண் யார்? என்பது குறித்து அந்த பகுதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மற்ற போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து சமீபத்தில் மாயமான பெண்கள் பற்றிய விவரத்தையும் சேகரித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை கொடூரமாக கொன்று, உடலை தண்டவாளத்தில் வீசிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்