திருச்செந்தூர் அருகே பரபரப்பு: தேர்தல் புறக்கணிப்பால் வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள் 13 ஓட்டுகளே பதிவானது

திருச்செந்தூர் அருகே பிச்சிவிளை பஞ்சாயத்தில் தேர்தல் புறக்கணிப்பால் வாக்காளர்கள் இன்றி 3 வாக்குச்சாவடிகளும் வெறிச்சோடின.

Update: 2019-12-27 22:30 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் அருகே பிச்சிவிளை பஞ்சாயத்தில் தேர்தல் புறக்கணிப்பால் வாக்காளர்கள் இன்றி 3 வாக்குச்சாவடிகளும் வெறிச்சோடின. அங்கு மொத்தம் 13 ஓட்டுகளே பதிவானது.

தேர்தல் புறக்கணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதற்கிடையே, திருச்செந்தூர் அருகே பிச்சிவிளை பஞ்சாயத்து தலைவர் பதவி எஸ்.சி. (பெண்) பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு மொத்தம் 785 வாக்காளர்களில் எஸ்.சி. பிரிவில் 6 வாக்காளர்களே உள்ளனர்.

எனவே, பிச்சிவிளை பஞ்சாயத்து தலைவர் பதவியை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து இருந்தனர். மேலும், பிச்சிவிளை பஞ்சாயத்தில் உள்ள 6 வார்டுகளிலும் போட்டியிடுவதற்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

13 வாக்குகள் பதிவு

இதையடுத்து பிச்சிவிளை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த ராஜேசுவரி, சுந்தராச்சி ஆகிய 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். தொடர்ந்து நேற்று நடந்த முதல்கட்ட தேர்தலில் பிச்சிவிளை பஞ்சாயத்தில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

அதன்படி, பிச்சிவிளை மேரி சவுந்திரபாண்டியன் உயர்நிலைப்பள்ளியில் 2 வாக்குச்சாவடிகளும், பிச்சிவிளை புதுக்கிணத்தான்விளை புனித அந்தோணியார் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டு இருந்தது.

இதில் மேரி சவுந்திரபாண்டியன் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிகளில் மொத்தம் 3 பெண்கள் உள்பட 13 வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். புனித அந்தோணியார் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் யாரும் வாக்களிக்க செல்லாததால், ஒரு ஓட்டும் பதிவாகவில்லை.

வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள்

பிச்சிவிளை பஞ்சாயத்து 6 வார்டுகளிலும் யாரும் போட்டியிடாததால், அங்கு வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறவில்லை. இதனால் அங்கு பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய 3 பதவிகளுக்கு வாக்காளர்கள் வாக்களித்தனர்.

தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தால், பிச்சிவிளை பஞ்சாயத்து வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி கிடந்தன. இதனால் அங்கு தேர்தல் பணிக்கு சென்ற தேர்தல் அலுவலர்கள், வாக்காளர்களின் வருகைக்காக காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர். பிச்சிவிளை பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள தெருக்கள், வீடுகளில் பொதுமக்கள் கருப்புக்கொடி கட்டி இருந்ததால் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்