கர்நாடகத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி, 2-ந் தேதி பெங்களூரு வருகை
கர்நாடகத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி 2-ந்தேதி பெங்களூருவுக்கு வருகிறார்.
பெங்களூரு,
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப் பயணமாக வருகிற 2-ந் தேதி (வியாழக் கிழமை) கர்நாடகம் வருகிறார்.
சித்தகங்கா மடத்திற்கு...
அன்று காலை தனி விமானம் மூலம் பெங்களூரு வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் துமகூரு செல்கிறார். அங்கு சித்தகங்கா மடத்திற்கு சென்று, மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி பெறுகிறார். அதன் பிறகு அங்கு ஜூனியர் கல்லூரி மைதானத்தில் விவசாயிகள் மாநாடு நடக்கிறது. இதில் மோடி கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு கிருஷி கர்மான் விருது மற்றும் மீன்பிடி உபகரணங்களை வழங்கி பேசுகிறார்.
அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மோடி பெங்களூரு வருகிறார். அன்று மாலையில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அலுவலகத்திற்கு செல்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அன்று இரவு கவர்னர் மாளிகையில் பிரதமர் மோடி தங்குகிறார். மறுநாள் 3-ந் தேதி 107-வது இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சி விவசாய பல்கலைக்கழகத்தில் உள்ள காந்தி கிருஷி அறிவியல் மையத்தில் நடக்கிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, நண்பகலில் பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். மோடி வருகையை முன்னிட்டு பெங்களூரு மற்றும் துமகூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. அதனால் இந்த பயணத்தின்போது, கர்நாடகத்திற்கு சில புதிய திட்டங்களை மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.