ஆம்பூர் அருகே, 5–வது நாளாக பயிர்களை நாசப்படுத்திய யானைகள் கூட்டம் - விரட்ட முடியாமல் திணறும் வனத்துறையினர்
ஆம்பூர் அருகே 5–வது நாளாக பயிர்களை யானைகள் கூட்டம் நாசப்படுத்தின. இதனை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே சின்னவரிகம், மாச்சம்பட்டு, மிட்டாளம் ஆகிய கிராம பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 20–க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த யானைகளில் தனித்தனியாகவும், குழுவாகவும் தினந்தோறும் ஒவ்வொரு பகுதிக்கு சென்று அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தக்காளி, நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களை மிதித்து நாசப்படுத்தி வருகிறது.
இதனால் இரவு நேரத்தில் யானைகள் வரும் வழித்தடங்களில் ஆம்பூர் மற்றும் ஆலங்காயம் வனச்சரக பகுதிகளை சேர்ந்த வனவர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் வனக்காவலர்கள் முகாமிட்டுள்ளனர்.
உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார் தலைமையில் விஸ்வநாதன், காந்தகுமார், செந்தில் ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் சாணி கணவாய் வனப்பகுதியில் ரோந்து செல்லும் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல் ஆம்பூர் வனச்சரக அலுவலர் (பொறுப்பு) இளங்கோவன் தலைமையில் சவுந்தர்ராஜன், ரமேஷ்குமார், மகேஷ், நிஷாந்த் உள்ளிட்ட குழுவினர் கோனேட்டி கிணறு கானாறு வனப்பகுதியில் ரோந்து செல்லும் பணியில் ஈடுபட்டனர். வனவர் சதீஷ் தலைமையில் பெருமாள், நிர்மல், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கொச்சேரி கானாறு வனப்பகுதியில் ரோந்து செல்லும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் யானைகள் கூட்டம் 5–வது நாளாக நேற்று முன்தினம் இரவு மாச்சம்பட்டு, கொத்தூர், பாலூர், உமராபாத், பனங்காட்டூர் பகுதிகளில் வயல்வெளிகளில் விடிய, விடிய அட்டகாசம் செய்தன. பாலூர் கிராமத்தில் சண்முகம், பெருமாள் என்பவரது நிலத்தில் கிருஷ்ணவேணி என்பவர் குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டு இருந்தார். இரவு புகுந்த காட்டு யானைகள் வாழை தோட்டங்களை நாசம் செய்தது. அதேபோல் மாச்சம்பட்டு கோதண்டராமன் ரெட்டியார் நிலத்தில் குத்தகைக்கு பயிரிட்டு இருந்த மனோகரன் பூந்தோட்டத்தையும் நாசப்படுத்தி உள்ளது.
காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கும், வயல்வெளிகள் மற்றும் தோப்பு பகுதிகளுக்கும் வராமல் இருக்கும் வண்ணம் வனத்துறையினர் 3 குழுக்களாக பிரிந்து ரோந்து சென்று வந்த நிலையில், காட்டு யானைகள் வேறு பகுதிக்கு சென்று பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.
யானைகளை காட்டுக்குள் விரட்ட முடியாமல் கடந்த 5 நாட்களாக வனத்துறையினர் திணறி வருகின்றனர். வனத்துறையினருடன் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து பட்டாசு வெடித்தும், மேளம் அடித்து யானையை காட்டுக்கு விரட்டி அடித்தாலும் மறுநாள் வேறுபகுதிக்கு வந்து விடுகிறது. இதனால் வனத்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
கடந்த 5 நாட்களாக தொடர்ந்து யானைகள் விவசாய பயிர்களை நாசம் செய்து வருவதால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் 20 யானைகள் முகாமிட்டுள்ளதால் ஊருக்கு யானை வந்து விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.