காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட விடுமுறையில் வந்தபோது பரிதாபம்

திருச்சியில் காதல் திருமணம் செய்த பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட விடுமுறையில் வந்தபோது பரிதாப சம்பவம் நடந்தது.

Update: 2019-12-26 22:15 GMT
திருச்சி,

திருச்சி சுப்பிரமணியபுரம் அருளானந்தர் கோவில்தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருடைய மனைவி மரிகிருதாபுஷ்பம் (வயது 55). இவர்களுடைய மகள் ஜெனிபர்(29). என்ஜினீயரான இவரும், கண்டோன்மெண்ட் ஸ்டேட் வங்கி அதிகாரிகள் காலனியை சேர்ந்த நவீன் என்பவரும் காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 3½ வயதில் பெண் குழந்தை உள்ளது. என்ஜினீயர்களான நவீனும், ஜெனிபரும் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஜெனிபர் விடுமுறையில் சென்னையில் இருந்து கடந்த 20-ந் தேதி திருச்சிக்கு வந்தார். திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள அவரது மாமியார் வீட்டில் தங்கி இருந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று முன்தினம் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். பின்னர் நவீன், உறவினர்களுக்கு இனிப்பு கொடுக்க பெற்றோருடன் சென்று விட்டார். வீட்டில் குழந்தையுடன் தனியாக இருந்த ஜெனிபர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிதுநேரம் கழித்து வெளியே சென்று இருந்த நவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடு திரும்பினர்.

வீட்டில் ஜெனிபர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் ஜெனிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன? போலீசார் விசாரணை

விசாரணையில் ஜெனிபருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என கண்டோன்மெண்ட் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஜெனிபருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகி உள்ளதால் இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்