பொதுமக்களின் வசதிக்காக பெங்களூருவில் பூங்காக்கள் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு மாநகராட்சி நடவடிக்கை
பெங்களூருவில், பொதுமக்களின் வசதிக்காக பூங்காக்கள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில், பொதுமக்களின் வசதிக்காக பூங்காக்கள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
‘பூங்கா நகர்’ பெங்களூரு
பெங்களூரு மாநகருக்கு ‘பூங்கா நகர்’ என்ற புனைப்பெயர் உள்ளது. இதற்கு பூங்காக்கள் நிறைந்து காணப்படுவது தான் காரணமாகும். பெங்களூரு நகரில் மொத்தம் 1,408 பூங்காக்கள் உள்ளன. இதில் 1,135 பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. 273 பூங்காக்கள் மேம்படுத்தப்படவில்லை.
தினமும் பெங்களூரு நகரில் உள்ள பல்வேறு பூங்காக்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல்நலத்தை பேணுகிறார்கள். சிறுவர், சிறுமிகள் பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்கிறார்கள். மேலும் பலர் பூங்காக்களில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து பொழுதை கழிக்கிறார்கள்.
நேரம் நீட்டிப்பு
பெரும்பாலான பூங்காக்கள் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு காலை 10 மணிக்கு பூட்டப்படும். அதன்பிறகு மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மூடப்படும். இந்த நிலையில் பூங்காக்கள் திறந்து இருக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டு உள்ளது. அதன்படி பூங்காக்கள் திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
‘தினமும் காலை 6 மணிக்கு பதில் காலை 5 மணிக்கு பூங்காக்கள் திறக்கப்பட வேண்டும். இரவு 8 மணிக்கு பதில் இரவு 9 மணிக்கு பூங்காக்கள் மூடப்பட வேண்டும். பூங்காக்களில் எந்த கொண்டாட்டங்களுக்கும் அனுமதி அளிக்க கூடாது. மதுபானம் அருந்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பூங்காக்களின் சாவிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிறுவனத்தினர் மட்டும் வைத்து கொண்டு பூட்டி, திறக்க வேண்டும். இதை மீறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‘ என்பன போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.