6 மாதங்களில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பலி: கடையநல்லூர் பகுதியில் தொடர் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்

கடையநல்லூர் பகுதியில் கடந்த 6 மாதங்களில் நடந்த தொடர் விபத்துகளால் 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2019-12-26 22:15 GMT
அச்சன்புதூர், 

தென்காசி மாவட்டத்தில் முக்கிய ஊராக கடையநல்லூர் அமைந்துள்ளது. இங்கு கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையானது புன்னையாபுரம், சிங்கிலிபட்டி, சொக்கம்பட்டி, திரிகூடபுரம், கிரு‌‌ஷ்ணாபுரம், கடையநல்லூர், மங்கலாபுரம், இடைகால், நயினாரகரம், சிவராம் பேட்டை இ.விலக்கு வரை அமைத்து உள்ளது.

இந்த சாலையானது குற்றாலம், செங்கோட்டை, கொல்லம், சபரிமலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. கடையநல்லூர் நகரின் மையப்பகுதியில் செல்லும் இந்த சாலையில் விபத்து, சாலை மறியல், பேரணி உள்ளிட்டவை நடந்தால் போக்குவரத்திற்கு மாற்று இடம் என்பது கிடையாது. சிங்கிலிபட்டியில் இருந்து சேர்ந்தமரம் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றி தான் இடைகால் வழியாக கடையநல்லூர் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த சாலைகள் வாசுதேவநல்லூரில் இருந்து கடையநல்லூர் வரை குண்டும், குழியுமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்கிறது. மேலும் கடையநல்லூர் நகரில் செல்கின்ற தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான ஆக்கிரமிப்பு கட்டிடங்களால் சாலையானது சுருங்கிவிட்டது என்று கூறப்படுகிறது. இதனால் கடையநல்லூரில் தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் இந்த சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களினால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் பலர் இறப்பதோடு, ஏராளமானவர்கள் காயம் அடைந்து உள்ளனர். கடந்த 6 மாதங்களில் கடையநல்லூர், சொக்கம்பட்டி, இலத்தூர் ஆகிய போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் நடந்த விபத்துகளில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்து உள்ளனர். இவ்வாறு தொடர் விபத்துகள் நடைபெறுவதால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இவ்வாறு நடைபெறும் தொடர் விபத்துகளை தடுப்பதற்கு இந்த பகுதியில் அதிக வேகமாக இருசக்கர வாகனங்களில் செல்வோரை காவல்துறை கண்காணிக்க வேண்டும். நகரில் முக்கிய இடங்களில் விபத்து நடைபெறும் பகுதியில் தடுப்புகள் அமைக்க வேண்டும். தொடர் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து மஸ்ஜித் முபாரக் தலைவர் சைபுல்லாஹ் காஜா கூறுகையில், பயணிகளின் தேவைக்காக இயக்கப்படும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையை பந்தய சாலையாக நினைத்து அதன் ஓட்டுனர்கள் அதிவேகத்தில் செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. போக்குவரத்து விதிகளை மீறி தாறுமாறாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நெடுஞ்சாலையை அகலப்படுத்த வேண்டும். இந்த பகுதியில் அபாய வளைவுகள் உள்ள இடங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அந்த இடங்களில் எச்சரிக்கை பலகை, ஒளிரும் ஸ்டிக்கர், வேகத்தடை அமைக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்