நடப்பு ஆண்டில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 540 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நடப்பு ஆண்டில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 540 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நாகராஜன் கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அங்கு செயல்பட்டு வரும் மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுகளில் நேற்று வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நாகராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அலுவலக கோப்புகள் பராமரிப்பு, நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை கேட்டறிந்த அவர் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பின்னர் ஐ.ஜி. நாகராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வடக்கு மண்டலத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பான முறையில் காக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 430 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். இந்த ஆண்டு அதை விட கூடுதலாக மொத்தம் 540 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால் ரவுடியிசம் குறைந்துள்ளது. அதேபோல் மணல் கடத்தலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் மணல் கடத்தல் சம்பவமும் குறைந்துள்ளது.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் லாட்டரி விற்பனைக்கு பெரும் புள்ளியாக செயல்பட்ட 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் கடைகளில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வார்கள். இப்போது ஆன்-லைன் மூலமாகவும் லாட்டரி விற்பனை செய்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்களை தேடி கண்டுபிடித்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறோம். போலீசாரால் நெருங்க முடியாத குற்றவாளிகள் என்று யாரும் கிடையாது.
மாணவர்களுக்கிடையே சாதிய உணர்வை தூண்டுபவர்களையும் கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வடக்கு மண்டலத்தை பொறுத்தவரை சாலை விபத்துகளை குறைக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சாலை விபத்துகள் குறைந்து வருகிறது.
அதுபோல் குற்ற சம்பவங்களை தடுக்கவும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநில போலீசாருக்கும், தமிழ்நாடு மாநில போலீசாருக்கும் எல்லை பிரச்சினை இல்லை. சுமூகமாகத்தான் இருக்கிறது. ரவுடியிச செயல்களில் ஈடுபடுவோர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். பிறக்க இருக்கிற ஆங்கில புத்தாண்டில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.