ராமநாதபுரம் அருகே, அரிய வகை வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடிய 5 பேர் சிக்கினர்
ராமநாதபுரம் அருகே அரிய வகை வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடிய 5 பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து பறவைகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனவர் சந்துரு ராஜா, வனக்காப்பாளர் ஜோசப், வனக்காவலர் செல்வராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் உப்பூர் அருகே வளமாவூர் கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வனத்துறையினரை கண்டதும் ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் செல்ல முயன்றது. அந்த நபர்களை வனத்துறையினர் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய சோதனையில், அரியவகை நீலச்சிறவி பறவைகளை வேட்டையாடி வைத்திருந்தது தெரியவந்தது. அதில் 3 பறவைகள் உயிருடனும், ஒருபறவை இறந்த நிலையிலும் இருந்தன. பிடிபட்ட நபர்களிடம் விசாரித்தபோது சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையை சேர்ந்த மாரிமுத்து (வயது 50), தேவிபட்டினம் முனியாண்டி மகன் ஆறுமுகம் (30), மற்றொரு ஆறுமுகம் (60), மாரியப்பன் மகன் முத்து (30), கருப்பையா மகன் ஆறுமுகம் (26) என்பது தெரியவந்தது.
இவர்கள் கண்மாய் பகுதியில் வலைவிரித்து இந்த அரிய வகை பறவைகளை வேட்டையாடி இறைச்சிக்காக விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து பறவைகள் மற்றும் வலைகளையும், 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்த வனத்துறையினர் உயிருடன் இருந்த பறவைகளை ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல் சரணாலயத்தில் பத்திரமாக கொண்டு விட்டனர்.
அரியவகை பறவைகளை வேட்டையாடிய மேற்கண்ட 5 பேருக்கும் ராமநாதபுரம் வனஉயிரின காப்பாளர் அசோக்குமார் அபராதம் விதித்தார்.
வேட்டையாடப்பட்ட இந்த அரியவகை நீலச்சிறவி பறவைகள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா பகுதிகளை வாழ்விடமாக கொண்டவை. இவை இந்தியா, வங்காளதேசம் மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா நாடுகளுக்கு பருவநிலையை தேடி இனப்பெருக்கத்திற்காக வருவது வழக்கம்.
தற்போது ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இந்த பறவைகள் இனப்பெருக்கத்திற்காக கூட்டம் கூட்டமாக வந்துள்ளன. அவ்வாறு வந்த பறவைகளை வேட்டையாடி பிடித்து விற்பனை செய்ய முயன்ற கும்பல்தான் பிடிபட்டுள்ளதாக வனச்சரகர் சதீஷ் தெரிவித்தார்.