வானில் இன்று நிகழும் சூரிய கிரகணத்தை பார்க்க திருச்சி கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு

வானில் இன்று நிகழும் சூரிய கிரகணத்தை பார்க்க திருச்சி கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 500 பிரத்யேக கண்ணாடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Update: 2019-12-25 22:45 GMT
திருச்சி,

சூரியன், சந்திரன் மற்றும் பூமி இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் ஆகும். அப்போது பூமி மற்றும் சூரியனுக்கு நடுவில் வரும் சந்திரன், சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும். பூமிக்கும், சந்திரனுக்கும் உள்ள தொலைவு 3 லட்சத்து 57 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் முதல் 4 லட்சத்து 7 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் தூரம் வரை மாறுபடுகிறது.

வெகுதொலைவில் நிலவு இருக்கும்போது, அதன் தோற்ற அளவு சூரியனின் தோற்ற அளவைவிட சற்று சிறியதாக இருக்கும். எனவே அப்போது கிரகணம் நேர்ந்தால் சூரியனை சந்திரனால் முழுமையாக மறைக்க இயலாது. ஒரு கங்கணம் அல்லது வளையம் போல சூரியனின் வெளிவிளிம்பு அதிகபட்ச கிரகணத்தின்போது வெளித்தெரியும்.

சிறப்பு ஏற்பாடு

எனவே இதை கங்கண சூரியகிரகணம் அல்லது வளைய சூரியகிரகணம் என்கிறோம். அதுபோன்ற சூரிய கிரகணம் இன்று (வியாழக்கிழமை) நிகழ உள்ளது. திருச்சியில் 95 சதவீதம் வரை சூரியனை சந்திரன் மறைத்து செல்லும். திருச்சியில் கிரகணம் இன்று காலை 8.07 மணிக்கு தொடங்கி 11.16 மணிக்கு முடியும். அதிகபட்ச கிரகணம் 9.32 மணிக்கு நிகழும். சூரியகிரகண நிகழ்வை பொதுமக்கள் காண்பதற்காக திருச்சி அண்ணா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கண்ணாடிகள் தயார்

இது குறித்து கோளரங்க திட்ட இயக்குனர் அகிலன் கூறும்போது, “சூரியனை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. கங்கண கிரகணத்தின்போதும் பார்க்கக்கூடாது. சூரிய கிரகணம் போன்ற வானவியல் நிகழ்வுகளின்போது, அண்ணா அறிவியல் மையம்-கோளரங்கத்தில் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். சூரிய பிம்பத்தை திரையில் விழச்செய்து காண்பிக்க ஏதுவாக தொலைநோக்கி அமைப்பு, சூரிய ஒளி வடிகட்டித்தகடுகள் ஆகியவை அமைக்கப்படுகிறது. இது தவிர, சூரிய கிரகண நிகழ்வை பொதுமக்கள் பார்க்க 500 பிரத்யேக கண்ணாடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள நகரங்களில் மீண்டும் இதுபோன்ற நிகழ்வை 2031-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தான் காண முடியும்.” என்றார். இதற்கிடையே அண்ணா கோளரங்கத்தில் சூரிய கிரகணத்தை பார்க்க வரும் பொதுமக்களுக்கு சென்னையை சேர்ந்த இளைஞர்கள் பிரத்யேக கண்ணாடிகளையும் விற்பனை செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்