தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முகுல் வாஸ்னிக் வாக்கு சேகரிப்பு
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் வாக்கு சேகரித்தார்.
ஆறுமுகநேரி,
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் நேற்று ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரத்தில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரத்தை தொடங்கினர்.
பின்னர் அவர்கள், பேரூர், சிவகளை, மங்களகுறிச்சி, உமரிக்காடு, வாழவல்லான், முக்காணி உள்ளிட்ட பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தனர்.
பிரசாரத்தின்போது அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் பேசியதாவது:-
மத்திய பா.ஜனதா அரசு குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுகிறது. மேலும் மத்திய பா.ஜனதா அரசு, தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. இதனால்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை தமிழக மக்கள் நிராகரித்தனர்.
நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி.யின் செயல்பாடு, தூத்துக்குடி மக்கள் பெருமைப்படும் வகையில் உள்ளது. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியானது பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதைக்குரிய கூட்டணி ஆகும். நாடாளுமன்ற அமைப்புக்கு இணையானது பஞ்சாயத்து அமைப்பு ஆகும். எனவே இந்த பஞ்சாயத்து தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். மக்களுக்கு நல்லாட்சி அமைய தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள்.
இவ்வாறு முகுல் வாஸ்னிக் பேசினார்.
அவருடன் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், வசந்தகுமார் எம்.பி., தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், தெற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராமன், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடன் இருந்தனர்.