மங்களூரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் விசாரணை முடிவடையும் வரை போலீசார் மீது நடவடிக்கை இல்லை மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

மங்களூரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் விசாரணை முடிவடையும் வரை போலீசார் மீது நடவடிக்கை இல்லை என்று மந்திரி பசவராஜ் ெபாம்மை கூறினார்.

Update: 2019-12-25 22:30 GMT
பெங்களூரு, 

மங்களூரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் விசாரணை முடிவடையும் வரை போலீசார் மீது நடவடிக்கை இல்லை என்று மந்திரி பசவராஜ் ெபாம்மை கூறினார்.

போலீஸ் மந்திரி பசவராஜ் ெபாம்மை மங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சட்டப்படி நடவடிக்கை

மங்களூரு துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.ஐ.டி. மற்றும் மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை அமைப்புகளும் தனித்தனியாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுவரை நாங்கள் போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். மங்களூரு வன்முறை சம்பவத்தில் போலீசார் எடுத்த திடமான நடவடிக்கையை அரசு பாராட்டுகிறது. எந்த அதிகாரியாக இருந்தாலும் சிறப்பாக செயல்படும்போது, அவர்களை முதுகில் தட்டி கொடுத்து ஊக்குவிப்பது அரசின் கடமை.

தற்போது சகஜநிலை

ஒருவேளை போலீசார் எச்சரிக்கையுடன் செயல்படாமல் இருந்திருந்தால், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய அசம்பாவித சம்பவம் நிகழ்ந்திருக்கும். தக்க நேரத்தில் போலீசார் சரியான முடிவு எடுத்து, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தினர்.

சட்டம்-ஒழுங்கு மற்றும் அமைதி ஆலோசனை கூட்டங்களை நடத்துவது குறித்து போலீசாருக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளோம். பல்வேறு அமைப்புகள், மத குழுக்களின் நிர்வாகிளை அழைத்து பேசும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். மங்களூருவில் தற்போது சகஜநிலை திரும்பியுள்ளது. நகரில் அமைதி நிலவ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்