கோத்தகிரியில், அரசு பஸ் மோதி பெண் பலி
கோத்தகிரியில் அரசு பஸ் மோதி பெண் பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து கட்டபெட்டு பகுதிக்கு நேற்று மாலை 5.30 மணிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அதனை வெஸ்ட்புரூக் பகுதியை சேர்ந்த நந்தகுமார்(வயது 40) ஓட்டினார். காவலர் குடியிருப்பு அருகில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது. தொடர்ந்து சாலையோரம் நடந்து சென்ற திருச்சிக்கடி ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா(53) என்பவர் மீது மோதி நின்றது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் டிரைவர் நந்தகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சாலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகளால்தான் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். உடனே போலீசார் அந்த தடுப்புகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.