திருப்பந்தியூர் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி திருப்பந்தியூர் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் திருப்பந்தியூர் கிராமத்தில் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் திருப்பந்தியூர் பகுதி பொதுமக்கள் செய்து இருந்தனர்.
திருவள்ளூர் பூங்கா நகரில் 48 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், காக்களூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் போன்றவற்றில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பஸ் நிறுத்தம் அருகே ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி நேற்று காலை முதல் மாலை வரை லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், வடை மாலை, துளசி மாலை உள்ளிட்ட சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.
ஆரணி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் லட்சார்ச்சனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி, அங்குள்ள ஆஞ்சநேயருக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது. பிறகு வண்ண மலர்களால் ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை மனமுருகி தரிசித்து வழிபட்டனர். பின்னர், கோவில் அருகே ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி, பக்தர்களுக்கு அறுசுவை உணவுகளை காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன் வழங்கினார்.
மேலும், காஞ்சீபுரம் சங்கரமடம் அருகே உள்ள, ஆஞ்சநேயர் கோவில், ஏகாம்பரநாதர் கோவில் 16 கால் மண்டபத்தில் உள்ள ஆஞ்சநேயர். சின்ன காஞ்சீபுரம் டோல்கேட்டில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோவில், முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில், உள்பட ஆஞ்சநேயர் கோவில்களில் ஆஞ்சநேயருக்கு வடைமாலைகள், துளசி மாலைகள் அணிவிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை வஜ்ஜகிரி வடிவேலன் மலையடிவாரத்தில் உள்ள ஜெய ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்காரம், ஏக தின லட்சார்ச்சனை, அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.