மங்களூரு துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசின் நிவாரணம் நிறுத்திவைப்பு எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

Update: 2019-12-25 22:30 GMT
மங்களூரு, 

மங்களூருவில் நடந்த கலவரத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 பேரின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

மங்களூருவில் கலவரம்

மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 19-ந் தேதி தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் முஸ்லிம் அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பினரால் போராட்டம் நடந்தது. அப்போது திடீரென கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் டயர்கள், மரச்சாமான்கள் மற்றும் ஏராளமான பொருட்களை சாலைகளில் போட்டு எரித்தனர்.

கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு ஆகியவற்றையும் நடத்தினர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட மங்களூரு அருகே கந்தக் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஜலீல்(வயது 49), குதுரோலி பகுதியைச் சேர்ந்த நவுசீன்(23) ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

கண்டனம்

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான விளக்கம் அளித்தனர். அதில் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபடுவதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு அதற்காக கற்களை ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்து சம்பவ இடத்தில் வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் சிலர் கைக்குட்டைகளாலும், துணிகளாலும் முகங்களை மறைத்துக் கொண்டு கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது. இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலியான அப்துல் ஜலீல், நவுசீன் ஆகியோருக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் தலா ரூ.5 லட்சமும், காங்கிரஸ் சார்பில் தலா ரூ.5 லட்சமும் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதற்கிடையே கர்நாடக அரசு சார்பிலும் அவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முதல்-மந்திரி எடியூரப்பா

இந்த நிலையில் கேரளாவுக்கு சென்றிருந்த முதல்-மந்திரி எடியூரப்பா அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு மங்களூருவுக்கு வந்தார். மங்களூருவில் அவர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து கலவரம் குறித்தும், அதில் ஈடுபட்டவர்கள் குறித்தும், வீடியோக்கள் வெளியானது குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம், ‘‘துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் வன்முறையில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு மாநில அரசு சார்பில் ஒரு பைசா கூட நிவாரண நிதி வழங்கப்படமாட்டாது’’ என்று தெரிவித்தார். முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

மங்களூரு கலவரம் திட்டமிட்ட சதி. அதுதொடர்பாக சி.ஐ.டி. விசாரணைக்கும், மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான அப்துல் ஜலீல், நவுசீன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. காங்கிரசார் போலீசார் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக வீடியோக்களை வெளியிட்டனர்.

தெளிவாக தெரிகிறது

ஆனால் போலீசார் கலவரம் தொடர்பாக வெளியிட்ட வீடியோவில் போராட்டக்காரர்கள் எந்த அளவிற்கு வன்முறையில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இதன்காரணமாக பா.ஜனதா தலைவர்கள், மந்திரிகள், பசனகவுடா பட்டீல் யத்னால் உள்பட பல எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், அதனால் அவர்களுக்கான நிவாரண நிதியை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கூறினர்.

அதனால் இதுவரையில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கப்படவில்லை. அதை நிறுத்தி வைத்துள்ளோம். கலவரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அப்துல் ஜலீலும், நவுசீனும் கலவரத்தில் ஈடுபட்டிருந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்படாது.

நிவாரண நிதி

விசாரணையில் அப்துல் ஜலீலும், நவுசீனும் வன்முறையில் ஈடுபட்டது உண்மை என நிரூபணம் ஆனால் கண்டிப்பாக நிவாரண நிதி வழங்கப்பட மாட்டாது. இது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியான அப்துல் ஜலீல், நவுசீன் ஆகியோர் மீது கலவரம் தொடர்பாக பந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்