வாலாஜா சுடுகாட்டில் மின்சார எரிமேடை அமைக்க வேண்டும் - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வாலாஜா சுடுகாட்டில் மின்சார எரிமேடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2019-12-25 22:15 GMT
வாலாஜா,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா நகரத்திற்கு தமிழ்நாட்டின் முதல் நகராட்சி என்ற பெருமை உண்டு. வாலாஜா நகரத்திற்கான சுடுகாடு நகரின் எல்லையில் பத்திரப்பதிவு அலுவலகம், கரிக்கல் மலை அருகே உள்ளது. அதனால் இதை கரிக்கல் சுடுகாடு எனவும் அழைப்பார்கள். இது வாலாஜா நகரத்திற்கான முதன்மையான சுடுகாடு ஆகும். நகரில் பெரும்பாலான பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை இங்கு தான் தகனம் செய்தும், அடக்கம் செய்தும் வருகிறார்கள்.

இந்த சுடுகாடு சுகாதாரம் மற்றும் சரியான பாதை வசதி, தண்ணீர் வசதி இன்றியும், எரிமேடை சிதிலமடைந்த நிலையிலும் உள்ளது. மேலும் இந்த சுடுகாட்டிற்கான எல்லை எதுவரையில் உள்ளது என்பது இன்று வரை வரையறுக்கப்படவில்லை. சுடுகாட்டிற்கு சுற்றுப்புற சுவர்கள் கட்டப்படவும் இல்லை.

சுடுகாட்டு பகுதியில் சாலை ஓரத்தில் குப்பைகள், இறைச்சிகழிவுகள் கொட்டப்படுகிறது. குப்பை, இறைச்சி கழிவுகளை மாடுகள், பன்றிகள், நாய்கள், ஆடுகள் கிளறிவிடுவதால் குப்பைகள் காற்றில் பறந்து சாலை முழுவதும் நிறைந்து சாலையே தெரியாத அளவிற்கு குப்பைகள் நிறைந்துவிடுகின்றன.

கட்டிட இடிபாடுகள் கழிவுகளும் இந்த சாலை ஓரத்தில் குவிக்கப்பட்டுள்ளதால் சாலை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பிணங்களை புதைக்கக் கூட இடம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. சுடுகாட்டை சுற்றி குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பலவித நோய்கள் ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது.

சுடுகாடு பகுதி வழியாக அனந்தலை, வள்ளுவம்பாக்கம், செங்காடு, செங்காடு மோட்டூர், ஒழுகூர், வாங்கூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் சாலையின் ஓர பகுதியையும் சுடுகாடாக்கி சமாதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் இந்த சாலை குறுகி வருகிறது.

சுடுகாட்டில் அமைக்கப்பட்ட மின் மோட்டார் மற்றும் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி ஆகியவை பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. எரிமேடையும் சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டில் அரிச்சந்திரன் சிலை முன்பு உள்ள கல்மேடையில் கிடத்தி இறுதிசடங்குகள் செய்வது வழக்கம். இந்த கல்மேடையும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அரிச்சந்திரன் சிலையின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் தரையில் குப்பையில் கிடக்கிறது.

இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்பவர்கள் கை, கால்கள், கழுவ தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள எரிமேடையை அகற்றிவிட்டு புதிதாக எரிமேடை அமைக்க வேண்டும். சுடுகாட்டை ஒட்டியுள்ள இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். புதிதாக அரிச்சந்திரன் சிலை அமைக்க வேண்டும், அரிச்சந்திரன் சிலை பகுதியில் குப்பைகள் கொட்டுவது தவிர்க்க வேண்டும், மின்சார எரிமேடை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்