நட்சத்திர நடிகர்களின் படங்கள் தோல்வியடைந்தால் நஷ்டஈடு தரவேண்டும் - தியேட்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
நட்சத்திர நடிகர்களின் படங்கள் தோல்வியடைந்தால் நஷ்டத்தை அவர்களே ஈடுகட்ட வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை,
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் கோவை சின்னியம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்களின் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் தலைமை தாங்கி னார். இதில் 150 தியேட்டர் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்களின் தோல்வியால் ஏற்படும் நஷ்டங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின்னர் சக்தி சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-
நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படங்கள் தோல்வியடைந்தால், நடிகர்களே பொறுப்பேற்றுக் கொண்டு, தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும். அந்த நஷ்டத்தை சம்பந்தப்பட்ட நடிகர்கள் ஈடுகட்டும் வரை அவர்களது படங்களை திரையிட மாட்டோம்.
ஒரு படம் வெளியிடப்பட்டு 100 நாட்களுக்குள் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் தளத்தில் (அமேசான், நெட் ப்ளீக்ஸ்) வெளியிட கூடாது. அப்படி வெளியிட்டால் அந்த தயாரிப்பாளர்களின் படத்தையும் வெளியிட மாட்டோம். தமிழக அரசின் மாநில வரியான 8 சதவீதத்தை பிப்ரவரி மாதத்துக்குள் திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் மார்ச் 1-ந் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்படும். இதுதொடர்பாக சங்க கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.