தனியார் நிதி நிறுவன சுவரில் துளையிட்டு கைவரிசை: 70 கிலோ தங்க நகைகளை அள்ளிச்சென்றது அம்பலம்
பெங்களூருவில் தனியார் நிதி நிறுவனத்தில் சுவரில் துளையிட்டு 70 கிலோ தங்க நகைகளை அள்ளிச்சென்ற மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் தனியார் நிதி நிறுவனத்தில் சுவரில் துளையிட்டு 70 கிலோ தங்க நகைகளை அள்ளிச்சென்ற மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
நிதி நிறுவனத்தில் திருட்டு
பெங்களூரு புலிகேசிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹெண்ணூர்-பானசவாடி ரோட்டில் அமைந்துள்ள லிங்கராஜபுரத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்கள் தங்க நகைகளை அடகு வைத்து நகைக்கடன் பெற்று வந்தனர். நேற்று முன்தினம் காலையில் அந்த நிதி நிறுவனத்தை ஊழியர்கள் திறந்து பார்த்தனர்.
அப்போது நிதி நிறுவனத்தின் கழிவறை சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கியாஸ் கட்டரை பயன்படுத்தி பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த தங்க நகைகளை திருடிச் சென்று இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் புலிகேசிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
70 கிலோ நகைகள் திருட்டு
இந்த விசாரணையின்போது, “சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கண்காணிப்பு கேமராக்களின் வயர்களை வெட்டி எடுத்து, அதன்பிறகு அவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் என்பதும், நிதி நிறுவனத்தில் இருந்து 70 கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் அள்ளிச்சென்றுள்ளனர் என்பதும்” போலீசாருக்கு தெரியவந்தது.
இந்த திருட்டு சம்பவமானது நன்கு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர். அத்துடன் திருடர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் காவலாளி உள்பட 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
அலட்சியமாக செயல்பட்டது...
இதற்கிடையே, நேற்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் திருட்டு நடந்த நிதி நிறுவனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பிறகு அவர் கூறுகையில், ‘நிதி நிறுவனத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் செய்யப்படவில்லை. நிதி நிறுவனத்தினர் அலட்சியமாக செயல்பட்டு உள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் சரியாக பணி செய்யவில்லை. இதுதான் திருட்டுக்கு முக்கிய காரணமாக உள்ளது. விரைவில் திருடர்களை கைது செய்வோம்’ என்றார்.