மங்களூரு துப்பாக்கி சூடு சம்பவம்: சி.ஐ.டி. விசாரணை, மாநில அரசின் கண்துடைப்பு நாடகம் - சித்தராமையா குற்றச்சாட்டு

மங்களூரு துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மாநில அரசு சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது ஒரு கண்துடைப்பு நாடகம் என்று சித்தராமையா குற்றம்சாட்டினார்.

Update: 2019-12-23 23:36 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று மங்களூருவில் சுற்றுப்பயணம் செய்தார். இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம். என்னுடன் முன்னாள் மந்திரிகள் எம்.பி.பட்டீல், ஜமீர்அகமதுகான் ஆகியோரும் வந்துள்ளனர். நான் கடந்த 20-ந் தேதியே இங்கு வர முயற்சி செய்தேன். ஆனால் எனக்கு போலீசார் தடை விதித்தனர். மறுநாள் வர முயற்சி செய்தேன். அப்போதும் தடை விதித்தனர்.

நான் எதிர்க்கட்சி தலைவர். எனக்கும் சட்டப்படி கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து கொடுத்துள்ளனர். அரசின் தவறுகளை சுட்டிக் காட்டவே எதிர்க்கட்சி உள்ளது. ஆனால் இங்கு வர எனக்கு அனுமதி வழங்கவில்லை. இது ஜனநாயக படுகொலை. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு வானத்தை நோக்கி சுடவில்லை. கண்ணீர் புகை குண்டு வீசவில்லை.

திடீரென துப்பாக்கியால் சுட்டு அப்பாவிகள் 2 பேரை கொன்றுள்ளனர். இது போலீஸ் ஆட்சியா? அல்லது ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியா?. இது மக்களுக்கான அரசா?. போலீசாருக்கு முதல்-மந்திரியே நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் நாங்கள் ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை கேட்டோம். ஆனால் மாநில அரசு சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது மாநில அரசின் கண்துடைப்பு நாடகம்.

துப்பாக்கியால் சுட்டு அப்பாவிகளை கொன்றவர்களை காப்பாற்றவே இந்த சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இறந்தவர்களை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளனர் என்பது துக்கமான விஷயம். தொழிலாளர்கள், மாணவர்களையும் வழக்கில் இடம் பெற செய்துள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எடியூரப்பா மற்றும் போலீஸ் மந்திரி பொறுப்பேற்க வேண்டும். நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும்.

ஊரடங்கு உத்தரவு இருக்கும்போது முதல்-மந்திரி, போலீஸ் மந்திரி மற்றும் ஷோபா எம்.பி. ஆகியோர் வருகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சி தலைவர்களை மட்டும் அனுமதிக்கவில்லை. எடியூரப்பா ஆட்சி வந்தாலே, துப்பாக்கி சத்தம் கேட்க தொடங்கிவிடுகிறது. இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதில் மாநில அரசு முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மங்களூருவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. ஆனால் கர்நாடகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தியது சரியல்ல.

போராட்டம் நடத்துவது என்பது பொதுமக்களின் உரிமை. இந்த உரிமையை யாராலும் பறிக்க முடியாது. மாநிலத்தில் அரசியல் சாசனமே படுகொலை செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் நடந்த போராட்டத்தில் எந்த வன்முறையும் ஏற்படவில்லை. இங்கு மட்டும் ஏன் வன்முறை நடந்தது?. துப்பாக்கி சூடு நடத்தியது ஏன்?. கேரளாவில் இருந்து வந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக அரசு சொல்கிறது. அப்படி என்றால் கேரளாவினரை ஏன் கைது செய்யவில்லை?.

இன்ஸ்பெக்டர் ஒருவர், இத்தனை முறை துப்பாக்கியால் சுட்ட பிறகும் ஒருவர் கூட சாகவில்லையே என்று பேசுகிறார். அந்த வீடியோ வெளியாகியுள்ளது. அந்த இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்ய வேண்டும். போலீசார் அச்சமான சூழலை உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து சட்டசபை கூட்டத்தொடரில் பிரச்சினை கிளப்புவோம். துப்பாக்கிகள் இருப்பது பூஜை செய்ய அல்ல என்று மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி சொல்கிறார். அவர் மந்திரி பதவியில் நீடிக்க தகுதியற்றவர். அவர் மீது வழக்கு தொடர வேண்டும்.

முன்னாள் மந்திரி யு.டி.காதர் வன்முறையை தூண்டிவிடும் வகையில் பேசியதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். ஆனால் அந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் தான் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துகளை கூறி வருகிறார்கள். வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும். மாநிலத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சமீபகாலமாக பா.ஜனதா தோல்வியை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவதாக பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகிறார்கள். பா.ஜனதா இல்லாத நாட்டை மக்கள் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்து வரும் நாட்களில் கர்நாடகத்திலும் பா.ஜனதா தோல்வி அடையும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்