திருவண்ணாமலை கூட்டுறவு துணை பதிவாளர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
திருவண்ணாமலையில் கூட்டுறவு துணை பதிவாளர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை வேங்கிக்கால் செல்வமுத்து நகர் வள்ளியம்மை பகுதியை சேர்ந்தவர் யோகவிஷ்ணு (வயது 43). அவருடைய மனைவி சசிகலா. யோகவிஷ்ணு திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் துணை பதிவாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 21-ந் தேதி அவருடைய மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை அழைத்து கொண்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார்.
நேற்று முன்தினம் மாலையில் யோகவிஷ்ணு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்கத்தில் உள்ள மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும்.
இதேபோல அவரது வீட்டின் எதிர் வீட்டில் திருவண்ணாமலை வேளாண்மை அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் ராஜசேகர் என்பவரது வீட்டிலும் 2 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.