கம்பம் வீரப்பநாயக்கன் குளத்தில் பிணமாக மிதந்த நிதி நிறுவன ஊழியர் - போலீசார் விசாரணை

கம்பம் வீரப்பநாயக்கன்குளத்தில் நிதிநிறுவன ஊழியர் பிணமாக மிதந்தார். அவரது சாவு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-12-23 22:30 GMT
கம்பம்,

கம்பம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள 2–வது வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 36). தனியார் நிதிநிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மனைவி கவிதா, செந்தில்குமாரின் செல்போனை தொடர்பு கொண்டார். அப்போது அந்த செல்போனில் செந்தில்குமாரின் நண்பரான பிரபா என்பவர் பேசியுள்ளார். அப்போது அவர் செந்தில்குமார் வேலை செய்து கொண்டிருப்பதால் அவரிடம் பேசமுடியாது என கூறி செல்போனை துண்டித்துள்ளார்.

பின்னர் பிரபா நேற்று காலை செந்தில்குமாரின் சட்டை மற்றும் அவரது செல்போனை கவிதாவிடம் கொடுத்துள்ளார். அப்போது தனது கணவரை எங்கே? என கவிதா கேட்டதற்கு அவர் பதில் அளிக்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த கவிதா தனது உறவினர்கள் உதவியுடன் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். அப்போது ஏழரசுகோவில் அருகில் உள்ள வீரப்பநாயக்கன் குளத்தில் செந்தில்குமார் பிணமாக மிதந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கவிதா அதுகுறித்து கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சப்–இன்ஸ்பெக்டர் அருண்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செந்தில்குமார் தனது நண்பர்களுடன் மது அருந்தியது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவர் போதையில் தடுமாறி குளத்தில் விழுந்து இறந்தாரா?, கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் செந்தில்குமாரின் நண்பரான பிரபா உள்பட மற்ற நண்பர்களிடமும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்