எடியூரப்பாவுக்கு மனிதநேயம் இருக்கிறதா? துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை சிறையில் தள்ள வேண்டும் - குமாரசாமி ஆவேசம்

துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை சிறையில் தள்ள வேண்டும் என்று குமாரசாமி ஆவேசமாக கூறினார்.

Update: 2019-12-22 22:29 GMT
பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று மங்களூருவுக்கு சென்று, வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் நிருபர் களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மங்களூருவில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஜலீல் என்பவர் மரணம் அடைந்துள்ளார். அவர் தனது வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு வெளியே வந்துள்ளார். அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். அவரின் குழந்தைகளின் கதி என்ன?. இன்னொருவர் சிவமொக்காவை சேர்ந்தவர். கல்வி உதவித்தொகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவரும் துப்பாக்கி சூட்டில் இறந்துள்ளார்.

ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மகன் பி.எச்.டி. படித்துள்ளார். அவரும் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து, உயிருக்கு போராடி வருகிறார். இவர்களுக்கு மாநில அரசு என்ன பதில் சொல்ல போகிறது. இந்த அரசு கொலை செய்துள்ள அனைவரும் அப்பாவிகள். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குமாறு கலெக்டருக்கு கூறியுள்ளதாக எடியூரப்பா தெரிவித்தார்.

இவ்வாறு கூறிய எடியூரப்பாவிடம் மனிதநேயம் இருக்கிறதா?. இது வெட்கக்கேடானது. இது ஒரு பாசிச அரசு. போலீஸ் மந்திரியாக பசவராஜ் பொம்மை இருக்கிறார். அவர் இங்கு 144 தடை உத்தரவை பிறப்பித்துவிட்டு டெல்லி சென்றுவிட்டார். வன்முறையில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசார் அந்த மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தவறு செய்த போலீசார் மீது இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீஸ் மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும். மங்களூருவில் போலீசார் பிரபாகர்பட் உத்தரவுப்படி செயல்படுகிறார்களா? அல்லது அரசு உத்தரவை பின்பற்றுகிறார்களா? என்று தெரியவில்லை. எடியூரப்பாவுக்கு மானம், மரியாதை இருந்தால், துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை சிறையில் தள்ள வேண்டும்.

முன்னாள் மந்திரி யு.டி.காதர் ஏதோ கூறிவிட்டார் என்று அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரபாகர்பட், ஷோபா எம்.பி. என்ன பேசினர்?. அவர் மீது வழக்கு பதிவு செய்தீர்களா?. இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்