காங்கேயம் அருகே, விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - விளைநிலங்களின் வழியாக எரிவாயு கொண்டு செல்ல எதிர்ப்பு
விளை நிலங்களின் வழியாக எரிவாயு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து காங்கேயம் அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
காங்கேயம்,
கோவை இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனகொத்திக்கு 294 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் மூலம் கியாஸ் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் ரூ.679 கோடி மதிப்பீட்டில் ஐ.டி.பி.எல். பைப்லைன்(எரிவாயு குழாய்) திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
இதனால் திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் கொண்டு செல்ல விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கேயம்- திருப்பூர் ரோடு படியூர் அருகே உள்ள கரட்டுப்பாளையம் பிரிவில் நேற்று விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அது பற்றிய விவரம் வருமாறு:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2013-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாயை விவசாய நிலத்தில் பதித்து நாசப்படுத்த கூடாது என்றும் சாலையோரமாக மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்று நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய அரசும் பின்பற்றவேண்டும்.
தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் ஐ.டி.பி.எல்., திட்டத்தை சாலையோரமாக கொண்டு செல்ல வலியுறுத்த வேண்டும் என்றும் விளைநிலங்களை சேதப்படுத்தி உழவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க மாட்டோம் என்றும் உறுதிமொழி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு தற்சார்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் தலைமை தாங்கினார். உயர்மின்கோபுர குழு ஒருங்கிணைப்பாளர் ஈசன், ஐ.டி.பி.எல் ஒருங்கிணைப்பாளர் ஜெயபிராகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமிஜெகதீசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
இதில் விவசாய சங்க பிரதிநிதிகள், தி.மு.க, கொ.ம.தே.க., ம.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் என 500-க் கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் நேரில் வந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.