அ.தி.மு.க.வினர் ஓட்டு கேட்டு வரும்போது 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது குறித்து கேள்வி கேளுங்கள் - ப.சிதம்பரம் பேச்சு
அ.தி.மு.க.வினர் ஓட்டு கேட்டு வரும்போது 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது குறித்து அவர்களிடம் கேள்வி கேளுங்கள் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
காரைக்குடி,
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடி நகரைச் சுற்றியுள்ள தேவகோட்டை ரஸ்தா, பர்மா காலனி, என்.ஜி.ஓ. காலனி ஆகிய பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கு போட்டியிடும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
3 வருடங்களுக்கு முன்பே வரவேண்டிய உள்ளாட்சி தேர்தல் தற்போது வந்துள்ளது. அதுவும் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு வந்துள்ளது. அ.தி.மு.க.வினர் உங்களிடம் ஓட்டு கேட்டு வரும் போது, ஏன் இத்தனை வருடம் தேர்தலை நடத்தவில்லை என்று கேள்வி கேளுங்கள். தேர்தலை நடத்தாமல், சட்ட விதிமுறைகளை மீறி தங்கள் வசதிக்கேற்ப தனி அதிகாரிகள் மூலமே உள்ளாட்சியை நடத்தி வந்தனர். இதனால் ஏழை எளிய மக்களின் அடிப்படை வசதிகள் கடந்த 3 ஆண்டுகளாக பூர்த்தி செய்யப்படவில்லை.
எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் உங்களது கோரிக்கைகளை பற்றி பேசதான் முடியும். ஆனால் உள்ளாட்சி பிரதிநிதிகள் உங்களுடன் இருந்து உங்கள் குறைகளை நேரில் கண்டு அதற்கு தீர்வு காண்பார்கள். அதனால் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும்போது, நம்முடன் எப்போதும் இருப்பவராக, நம்மில் ஒருவராக, நமது இன்ப துன்பங்களில் பங்கு கொள்பவராக உள்ளவரை தேர்வு செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின்போது தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. துரைராஜ், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.