கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி கலெக்டர் பார்வையிட்டார்

கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. இதை கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2019-12-22 23:00 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஏற்கனவே முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. நேற்று 2-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் அந்தந்த ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் நடந்தது. கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த பயிற்சி வகுப்பில் மண்டல தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டு வாக்குப் பதிவு நாள் அன்று செய்ய வேண்டிய பணிகள், வாக்குப்பதிவுக்கு, பிறகு செய்ய வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தேர்தல் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பிறகு கலெக்டர் அன்புசெல்வன் கூறியதாவது:-

சிறப்பாக செயல்பட வேண்டும்

உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும். மாவட்டத்தில் 683 ஊராட்சிகளுக்கும், 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், ஒரு மாவட்ட ஊராட்சிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 6 ஆயிரத்து 39 பதவிகளுக்கு 2 ஆயிரத்து 888 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 21 ஆயிரம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களுக்காக 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.

அடிப்படை வசதிகள்

மேலும் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் போதிய பாதுகாப்புகள், மின்சாரம், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களில் போதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

விருத்தாசலம்

விருத்தாசலம் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு, வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்கு வசதியாக 192 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பணிபுரியும் தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி முகாம், விருத்தாசலத்தில் நேற்று நடந்தது. இதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரி ஜெயக்குமாரி தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சுந்தரம், சிவா, மாதேஸ்வரன், லட்சுமி, ராஜே‌‌ஷ், கண்ணன், கணபதி ஆகியோர் கலந்து கொண்டு வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் வரும்போது அடையாள அட்டை பரிசீலனை, பட்டியல் சரிபார்ப்பு, விரலில் மை வைப்பது, வாக்குச்சீட்டை பாதுகாப்பாக பெறுவது ஆகியவை குறித்து பயிற்சியளித்தனர்.


மேலும் செய்திகள்