சிவகிரி அருகே, கோரக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
சிவகிரி அருகே கோரக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகிரி,
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இனாம் கோவில்பட்டி நாடார் உறவின்முறை தலைவர் பால்ராஜ் தலைமையில் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த மகேந்திரன், முத்தையா, மாடசாமி, காமராஜ், வேல்சாமி, ஞானராஜ் உள்ளிட்டோர் சிவகிரி தாசில்தார் கிருஷ்ணவேலிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே அமைந்துள்ளது இனாம்கோவில்பட்டி கிராமம். தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையில் சிவகிரி தாலுகா பகுதியில் 63 குளங்கள் நிரம்பியும், இனாம்கோவில்பட்டியில் உள்ள கோரக்குளம் கண்மாயில் தண்ணீர் இல்லை. அதற்கு காரணம், இந்த குளத்துக்கு நீர்வரத்தானது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவை சேர்ந்த சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் உள்ள பூக்குடி கண்மாயில் இருந்துதான் இனாம்கோவில்பட்டி பகுதியில் உள்ள கோரக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வர வேண்டும்.
தற்போது பூக்குடி கண்மாய் அதன் முழு கொள்ளளவை எட்டியும், கோரக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க பூக்குடி கண்மாய் சங்கத்தினர் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் சொக்கநாதன்புத்தூரில் உள்ள கண்ணீரைந்தான்குளம், பூவானிக்குளம், புதுக்குளம், களத்தூர் குளம், பூக்குடி குளம் போன்ற குளங்களுக்கு தென்காசி மாவட்டம் சிவகிரியில் அமைந்துள்ள பெரியகுளம் கண்மாயில் இருந்துதான் கலிங்கல்மடை வழியாக உபரிநீர் சென்று மேற்படி குளங்கள் நிரம்புகின்றன. ஆனால் இனாம்கோவில்பட்டி கோரக்குளம் கண்மாயில் மட்டும் தண்ணீர் இல்லை. இதனால் இனாம்கோவில்பட்டி பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே இனாம்கோவில்பட்டி கோரக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.