ஊட்டியில், அனாதையாக வீசப்படுவதை தடுக்க நடவடிக்கை: பச்சிளம் குழந்தைகளை காக்க தொட்டில் - கலெக்டர் தகவல்

ஊட்டியில், பச்சிளம் குழந்தைகள் அனாதையாக வீசப்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக, அவைகளை காக்கும் வகையில் தொட்டில் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-12-22 22:30 GMT
ஊட்டி,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேனி, சேலம், தர்மபுரி, கிரு‌‌ஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பெண் சிசு கொலையை தடுக்கும் வகையில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்தார். அந்த திட்டத்தின் படி அரசு மருத்துவமனைகள், முக்கிய இடங்களில் தொட்டில் குழந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்லும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஒரு குழந்தை வீசப்பட்டு இருந்தது.

மேலும் ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியில் வனப்பகுதியையொட்டி உள்ள புதரில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை வீசப்பட்டது. அந்த குழந்தைகள் மீட்கப்பட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இன்குபெட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக பச்சிளம் குழந்தைகளை சாலையோரங்களிலும், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் வீசி செல்வது அதிகமாகி வருகிறது. அதனை தடுக்கும் வகையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் தொட்டில் ஒன்று ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ள தாவது:-

நீலகிரியில் சமீப காலங்களில் பச்சிளம் குழந்தைகளை வனப்பகுதிகளில் அனாதையாக வீசி செல்வது அதிகமாகி வருகிறது. அதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதனை தடுக்கும் வகையிலும், அனாதையாக வீசி செல்லப்படும் குழந்தைகளை காக்கும் வகையிலும் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் தொட்டில் ஒன்று அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. தொட்டில் அமைந்து உள்ள பகுதியின் அருகே கண்காணிப்பு கேமராக்கள் ஏதுமில்லை.

எனவே, குழந்தையை வளர்க்க இயலாத நிலையில் உள்ள பெற்றோர் தங்களது குழந்தையை வனப்பகுதியிலோ, சாலையோரங்களிலோ, குப்பை தொட்டிகளிலோ, வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளிலோ, முட்புதர்களிலோ விட்டு செல்லாமல், அந்த தொட்டிலில் குழந்தையை விட்டு செல்ல வேண்டும்.

அந்த தொட்டிலில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் 0423-2445529 என்ற தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே குழந்தையை விட்டு சென்றதும், அந்த தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களை பற்றிய தகவல்கள் வெளியிடப்படமாட்டாது.

குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு பராமரிப்பும், அதற்கு பாதுகாப்பும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்