மங்களூருவில் நடைபெற்ற வன்முறை,துப்பாக்கி சூடு குறித்து விசாரணை; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள்.

Update: 2019-12-22 00:20 GMT
மங்களூருவில் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று இது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், மங்களூரு சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப் படும் என்று அறிவித்தார்.

மங்களூரு, 

மங்களூருவில் கடந்த 19-ந்தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது.

ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஊர்வலம், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை மீறி நடந்த இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதனால் போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசி எறிந்தனர். மேலும் தள்ளுவண்டிகள், டயர்கள், வாகனங்களை நடுரோட்டில் போட்டு தீவைத்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசினர். அத்துடன் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானார்கள். மேலும் 5-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி குண்டுபட்டு காயமடைந்தனர். அத்துடன் கல்வீச்சில் 33 போலீசார் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சட்டம்-ஒழுங்கை சீர்செய்யவும், வதந்திகள் பரவுவதை தடுக்கவும் கடந்த 19-ந்தேதி முதல் மங்களூருவில் இணையதள சேவைகள், செல்போன் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் பாண்டேஸ்வர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மங்களூரு நகரில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது.

இருப்பினும் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், வெளிநபர்கள் மங்களூருவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் ஹர்ஷா உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் நேற்றும் 3-வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இதனால் மங்களூரு மாநகரில் நெல்லிக்காய் ரோடு, பாண்டேஸ்வர், பந்தர், பண்ட்ஸ் ஆஸ்பத்திரி சர்க்கிள், ஜோதி சர்க்கிள், உல்லால், மங்களூரு துறைமுகம், தலப்பாடி, கோட்டேகார், தொக்கொட்டு உள்ளிட்ட பகுதிகளும், முக்கிய சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தன.

இதற்கிடையே நேற்று காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை 2 மணி நேரம் ஊரடங்கு உத்தரவை தளர்த்தி போலீசார் உத்தரவிட்டனர். அதாவது வீட்டுக்கு தேவையான பொருட்கள், மருந்து, மாத்திரைகள், மளிகை பொருட்களை வாங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து சென்டிரல் மார்க்கெட் மற்றும் சாலையோர கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றதை காண முடிந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு தளர்வு பற்றி தகவல் தெரியாமல் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

மேலும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்துக்கடைகளும் திறந்திருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. காலை 8 மணிக்கு பிறகு சிலர் கூட்டம், கூட்டமாக கடை வீதிகளுக்கு வந்தனர். ஆனால் அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர். அதையும் மீறி சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். மேலும் சிலரை போலீசார் கைது செய்தனர்.

வன்முறை சம்பவங்களால் மங்களூரு மாநகர் முழுவதும் அரசு பஸ், தனியார் பஸ், வாடகை கார்கள், ஆட்டோக்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் நாளை (அதாவது இன்று) வரை தனியார் பஸ்களை இயக்கமாட்டோம் என்றனர். இதனால் மங்களூரு நகரில் உள்ள பஸ் நிலையங்கள், பஸ்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன.

பெங்களூருவில் இருந்து மங்களூரு சென்ற அரசு, தனியார் பஸ்கள் உப்பினங்கடி டவுனிலேயே நிறுத்தப்பட்டன. அதுபோல் உப்பினங்கடியில் இருந்து பெங்களூரு உள்பட மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் இருந்து மங்களூரு உள்பட தட்சிணகன்னடா மாவட்டத்திற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. அண்டை மாவட்டமான உடுப்பிக்கு மட்டுமே உப்பள்ளியில் இருந்து பஸ்கள் வந்து சென்றன. மேலும் மங்களூரு மாநகர போக்குவரத்து கழக பஸ்களும் இயக்கப்படவில்லை. போலீசார் கேட்டுக்கொண்டதன் பேரில் மாநகர பஸ்கள் சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வன்முறை ஏற்பட்ட மங்களூருவில் உண்மை நிலையை அறியவும், சம்பவம் பற்றி கேட்டறியவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிந்துக்கொள்ளவும் முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரி கோவிந்த்கார்ஜோள், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் நேற்று பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூரு பஜ்பே விமான நிலையத்தில் வந்திறங்கினர்.

அங்கு அவரை கர்நாடக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அமர்குமார் பாண்டே, சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி. தயானந்தா ஆகியோர் சந்தித்தனர். அவர்களுடன் விமான நிலையத்திலேயே எடியூரப்பா மங்களூருவில் தற்போதைய நிலவரம் குறித்தும், வன்முறை சம்பவங்கள் பற்றியும் விவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆலோசனை சுமார் 10 நிமிடங்கள் நடந்தன. இந்த ஆலோசனையின் போது மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் ஹர்ஷா பங்கேற்கவில்லை. அவர் சர்க்யூட் ஹவுஸ் விருந்தினர் மாளிகையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

அதன்பின்னர் எடியூரப்பா விமான நிலையத்தில் இருந்து மங்களூரு சர்க்யூட் ஹவுஸ் விருந்தினர் மாளிகைக்கு சென்று, அங்கு உயர் போலீஸ் அதிகாரிகளுடன் 2-வது முறையாக ஆலோசனை நடத்தினார். இதில் கூடுதல் டி.ஜி.பி. அமர்குமார் பாண்டே, ஐ.ஜி. தயானந்தா, மங்களூரு போலீஸ் கமிஷனர் ஹர்ஷா, கலெக்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின் போது வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். அத்துடன் மங்களூரு மாநகரில் சட்டம்-ஒழுங்கின் தற்போதைய நிலை குறித்தும் எடியூரப்பா கேட்டறிந்தார்.

மேலும் மங்களூருவில் அமைதி திரும்ப எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக போலீஸ் அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் துணை முதல்-மந்திரி கோவிந்தகார்ஜோள், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, மாவட்ட பொறுப்பு மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி, சிக்கமகளூரு- உடுப்பி தொகுதி எம்.பி. ஷோபா, எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். அதன் பின்னர் இந்து, முஸ்லிம் மதத் தலைவர்களுடனும் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மங்களூருவில் நடந்த போராட்டங்கள், போலீஸ் துப்பாக்கிச்சூடு குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். மங்களூருவில் தற்போது அமைதி திரும்பி வருகிறது. இதனால் இன்று (நேற்று) பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்வு படுத்தப்படும். அதன் பின்னர் மாலை 6 மணி முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இந்த ஊரடங்கு உத்தரவு நாளை (அதாவது இன்று) நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும். ஆனால் 144 தடை உத்தரவு நீடிக்கும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் சட்டத்தை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் ஆயுதக்கிடங்கு சுவரை இடிக்க முயன்றனர். இதனால் அவர்களை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 2 பேர் பலியானார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் சட்டவழிமுறைகள் படி உரிய நிவாரணம் வழங்கப்படும்.

எங்கள் அரசு இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்கள் என்ற பாகுபாடு பார்ப்பது இல்லை. அனைத்து மதத்தினரும் எங்களுக்கு ஒன்று தான். மங்களூருவில் நடந்த வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச்சூடு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். ஆனால் எந்த வகையான விசாரணை நடத்துவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. போலீசார் முன்எச்சரிக்கையாக செயல்படாதது குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா பொறுப்பானவர். அவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின்னர் எடியூரப்பா, போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், அரசு சார்பில் தேவையான உதவிகளை செய்வதாகவும், நிவாரண நிதி வழங்குவதாகவும் உறுதி அளித்தார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடந்தன.

இதற்கு மத்தியில் மங்களூருவில் நேற்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இதனால் வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள் வெளியே வந்தனர். ஆனால் கூட்டம், கூட்டமாக செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. மக்கள் கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்ற வண்ணம் இருந்தனர். மேலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன் பின்னர் நேற்று மாலை 6 மணிக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

நேற்று மங்களூருவில் காலை 2 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், 2-வது முறையாக நேற்று மாலையிலும் 3 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மங்களூரு மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்