மராட்டியத்தில் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி; உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மராட்டியத்தில் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக சட்டசபையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

Update: 2019-12-21 23:52 GMT
நாக்பூர், 

மராட்டியத்தில் வறட்சி, பருவம் தவறிய மழை, போதிய விளைச்சல் இன்மை, விளைபொருளுக்கு உரிய விலை இன்மை போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக மரத்வாடா மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் புதிதாக பதவியேற்ற சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்துள்ளது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று நாக்பூரில் நடந்த சட்டசபை கூட்டத்தில் கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை நிலுவையில் உள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த கடன் தள்ளுபடியின் உச்சவரம்பு ரூ. 2 லட்சம் ஆகும். இது ‘மகாத்மா ஜோதிராவ் புலே கடன் தள்ளுபடி திட்டம்’ என அழைக்கப்படும்.

மேலும் கடன்களை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து பேசிய நிதி மந்திரி ஜெயந்த் பாட்டீல், “இந்த விவசாய கடன் தள்ளுபடி எந்தவித நிபந்தனையும் அற்றது. இதுகுறித்த விவரங்கள் உரிய நேரத்தில் முதல்-மந்திரி அலுவலகத்தால் வெளியிடப்படும்” என்றார்.

ஆனால் முழுமையான விவசாய கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்ற தவறி விட்டதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார். மேலும் ஆட்சியமைக்கும் முன்பு சிவசேனா வலியுறுத்தியது போல பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் அரசு முன்வரவில்லை எனவும் அவர் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜனதா தலைமையிலான தேவேந்திர பட்னாவிஸ் அரசு ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடனை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

ஏழைகள் நலன் கருதி 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம்; மண்டலம் வாரியாக முதல்-மந்திரி அலுவலகம் அமைகிறது

மராட்டியத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக மும்பை முதல்-மந்திரி அலுவலகத்திற்கு பயணிக்கவேண்டி உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மண்டல வாரியாக முதல்-மந்திரி அலுவலகம் அமைக்கப்படும் என நாக்பூர் சட்டசபையில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

இந்த அலுவலகங்கள் மந்திராலயாவில் உள்ள மைய அலுவலகத்துடன் இணைந்து செயல்படும். அதிகாரத்தை பரவலாக்க தனது அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல் ஏழைகளுக்கு 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் “சிவ் போஜன்” எனும் திட்டம் சோதனை முயற்சியாக முதல்கட்டமாக 50 இடங்களில் தொடக்கப்படும் எனவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார். மேலும் அனைத்து நீர்ப்பாசன திட்டங்களும் 2023-ம் ஆண்டிற்குள் முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்