வாலாஜாபாத்தில், பாம்புடன் அருள்வாக்கு சொன்ன பெண் சாமியார் கைது - வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

வாலாஜாபாத்தில் பாம்பை கழுத்தில் தொங்கவிட்டபடி அருள்வாக்கு சொன்ன பெண் சாமியாரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2019-12-21 23:45 GMT
வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வெள்ளரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கபிலா (வயது 35). பட்டதாரியான இவர் கடந்த 2000-ம் ஆண்டு முதல் வட பத்ரகாளி அம்மனுக்கு கோவில் கட்டி, பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார். இவர், கடந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேக விழாவில் நல்ல பாம்புகளை வைத்து சர்ப்ப சாந்தி என்னும் நாக பூஜை செய்துள்ளார். இந்தநிலையில் அருள்வாக்கு சொல்லி நோய்களை குணப்படுத்துவதாக கூறியும், கோவிலையும் விளம்பர படுத்துவதற்காகவும் கபிலா, தனது கழுத்தில் நாகப்பாம்பை தொங்க விட்டபடி அருள்வாக்கு சொல்வதுபோல் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவியது.

இதுபற்றி காஞ்சீபுரம் மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிரிஜாலாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி செங்கல்பட்டு வனச்சரகர் பாண்டுரங்கன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று பெண் சாமியார் கபிலாவிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர், வன விலங்குகள் மிருகவதை தடுப்புச்சட்டத்தின் கீழ், கபிலாவை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண் சாமியார் கபிலாவுக்கு, பாம்பு கொடுத்த பாம்பாட்டியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்