பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் : கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கோவையில் பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை,
கோவையை சேர்ந்த பிளஸ்-1 மாணவி கடந்த மாதம் 26-ந் தேதி தனது காதலனுடன் ஒரு பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் காதலனை தாக்கி விட்டு மாணவியை மறைவிடத்திற்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 27), பப்ஸ் கார்த்தி (26), ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயண மூர்த்தி (32) ஆகிய 6 பேரைகைது செய்தனர்.
அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் 6 பேரும் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில், கைது செய்யப்பட்ட மணிகண்டன், பப்ஸ் கார்த்தி, ராகுல் ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனைத்து மகளிர் போலீசார் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.
அதை ஏற்றுக் கொண்டுமாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டார். இதனால் அவர்கள் 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதற்கான உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் உள்ள அவர்கள் 3 பேரிடமும் வழங்கப்பட்டது. இது போல் மற்ற 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.