மசினகுடி அருகே, காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி
மசினகுடி அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
மசினகுடி,
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள செம்மநத்தம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட இருளர் இன ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு அதேப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயம் செய்ய நிலம் வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் அந்த நிலத்தில் சில ஆதிவாசிகள் விவசாயம் செய்ய தொடங்கி உள்ளனர். குறிப்பாக பீன்ஸ், கத்தரிக்காய் உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களை தின்பதற்காவும், நாசம் செய்வதற்காவும் இரவு நேரங்களில் மான்கள், காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வருகின்றன. இதனால் ஆதிவாசி மக்கள், இரவு நேரங்களில் விவசாய நிலத்தில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் செம்மநத்தம் பகுதியை சேர்ந்த பெள்ளியம்மாள் (வயது 60) என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்திற்கு காவலுக்கு சென்று உள்ளார். அப்போது அவர் தான் வளர்த்து வரும் நாயையும் உடன் அழைத்து சென்று உள்ளார். பின்னர் அங்கிருந்த குடிசையில் தங்கி இருந்து காவல் காக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அந்த தோட்டத்துக்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று வந்து உள்ளது. அந்த யானையை கண்டதும் பெள்ளியம்மாள் வளர்த்து வரும் நாய் குரைத்தபடி, யானையை நோக்கி ஓடியது. அப்போது ஆவேசமடைந்த அந்த காட்டு யானை நாயை துரத்த தொடங்கி உள்ளது. இதனால் அந்த நாய் பெள்ளியம்மாள் இருந்த குடிசைக்குள் புகுந்துள்ளது. அப்போது அந்த யானை, குடிசையை இடித்து தள்ளியதுடன், அங்கிருந்த பெள்ளியம்மாளையும் தாக்கியது. மேலும் அந்த யானை அவரை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது
இதனால் அவர் தோட்டத்தில் உள்ள ஒரு புதரில் விழுந்தார். மேலும் அவர் சத்தம் போட்டு கத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து தோட்டங்களில் இருந்த ஆதிவாசிகள் தீப்பந்தங்களுடன் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த தோட்டத்தில் காட்டு யானை ஒன்று நிற்பதை கண்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும், தகர டப்பாக்கள் மூலம் ஒலி எழுப்பியும், தீப்பந்தங்கள் காட்டியும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அதன்பின்னர் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக மசினகுடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஊட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெள்ளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மசினகுடி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை கள இயக்குனர் ஸ்ரீகாந்த், வனச்சரகர்கள் மாரியப்பன், காந்தன், வனவர் சித்தராஜ் மற்றும் வனத்துறையினர், யானை தாக்கியதில் இறந்த பெள்ளியம்மாளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நஷ்டஈடாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.