பாசனத்துக்கு தண்ணீர் கேட்டு 3-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்

கன்னிவாடி அருகே பாசனத்துக்கு தண்ணீர் கேட்டு 3-வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

Update: 2019-12-21 22:30 GMT
கன்னிவாடி, 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியில் 1 அடி உயரத்தில் இருந்த தடுப்புச்சுவர் மேலும் 3 அடிக்கு உயர்த்தப்பட்டது. இதன்காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக குடகனாற்றுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் அனுமந்தராயன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டது.

எனவே ராஜவாய்க்கால் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரை 1 அடியாக குறைக்க கோரியும், பாசனத்துக்கு தண்ணீர் கேட்டும் அனுமந்தராயன்கோட்டை, வக்கம்பட்டி உள்ளிட்ட 12 கிராம மக்கள், விவசாயிகள் அனுமந்தராயன்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3-வது நாளாக நேற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடக்கும் இடத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். நடுங்க வைக்கும் பனியிலும் தொடர்ந்து 3-வது நாளாக அவர்களின் போராட்டம் தொடருகிறது. அவர்களுக்கு தேவையான உணவு போராட்டம் நடக்கும் இடத்திலேயே சமைத்து வழங்கப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. கோரிக்கை நிறைவேறும் வரை அனுமந்தராயன்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம். யாருக்கும் வாக்களிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே மயிலாப்பூர் கிராம மக்கள் அப்பகுதியில் தனியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக ஊரின் மையப்பகுதியில் உள்ள கலையரங்கம் முன்பு ஆண்களும், பெண்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. மற்றும் விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். ராஜவாய்க்கால் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரின் உயரத்தை 1 அடியாக குறைக்க வேண்டும். குடகனாற்றில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து குடகனாற்றில் 5 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் ராஜவாய்க்கால் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரின் உயரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை எழுத்துப்பூர்வமாக எழுதி தருமாறு விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். இதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவில்லை. இதனால் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்