சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்தேரியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-20 23:30 GMT
மும்பை, 

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சம்பவத்தன்று துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று தரை இறங்கியது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது, பயணி ஒருவர் கிரீன் சிக்னலை தாண்டி நடந்து சென்றுகொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பயணியை மறித்து அவரது உடைமைகளில் சோதனை நடத்தினர்.

இதில், ஒரு சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 29 தங்கச்சங்கிலிகள், 30 பிரஸ்லெட்டுகள் போன்ற நகைகள் உள்பட 4 கிலோ எடையுள்ள தங்கம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 35 லட்சம் ஆகும். இதையடுத்து அதிகாரிகள் அந்த பயணியை சகார் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அவர் அந்தேரி ஜே.பி. ரோடு பகுதியை சேர்ந்த கவுரவ் திலிப்(வயது35) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், கடத்தல் தங்கத்தை தென்மும்பையை சேர்ந்த ஜாபர்பாய் என்பவரிடம் கொடுக்க வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்