மதுரை அருகே அ.ம.மு.க. பிரமுகர் கொலையில் அ.தி.மு.க. முன்னாள் பேரூராட்சி தலைவர் உள்பட 5 பேர் கைது

மதுரை அருகே அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-20 22:45 GMT
மேலூர், 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளபட்டியில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவராக இருந்தவர் அசோகன். அ.ம.மு.க. பிரமுகரான இவர் நேற்று முன்தினம் காலை நடைபயிற்சி சென்றபோது 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் வரை அசோகனின் உடலை வாங்க மாட்டோம் என அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் 6 பேர் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

மேலும் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் போலீசார் நடத்திய விசாரணையில், அரசியல் விரோதம் காரணமாக கூலிப்படையை வைத்து அசோகனை தீர்த்து கட்டி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அ.வல்லாளபட்டி பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளரும், பேரூராட்சி முன்னாள் தலைவருமான உமாபதி(வயது 45), அ.வல்லாளபட்டியை சேர்ந்த முருகேசன் (46) மற்றும் கூலிப்படையை சேர்ந்த மதுரை தத்தனேரியை சேர்ந்த பிரகாஷ்ராஜ்(26), ஆண்டார்கொட்டம் கல்மேடுவை சேர்ந்த செல்வம்(48), அண்ணாநகர் யாகப்பாநகரை சேர்ந்த பன்னீர்செல்வம் (47) ஆகிய 5 பேரை மேலவளவு போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஆயுதங்கள், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உமாபதி, அசோகன் ஆகிே்யார் அ.தி.மு.க.வில் ஒன்றாக செயல்பட்டனர். பின்னர் இருவரும் அ.ம.மு.க.வில் இணைந்தனர் . கடந்த நவம்பர் மாதம் உமாபதி மட்டும் அ.ம.மு.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஆனால் அசோகன் தொடர்ந்து அ.ம.மு.க.வில் இருந்து விலகாமல் இருந்தார். இதற்கு பின்னர் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் அசோகன் கொலை செய்யப்பட்டு இருப்பதும் விசாரணையில் ெதரியவந்தது.

மேலும் செய்திகள்