சேலத்தில் பயங்கரவாதிகள் சிம்கார்டுகளை வாங்கியது எப்படி? - பரபரப்பு தகவல்கள்

சேலத்தில் பயங்கரவாதிகள் சிம்கார்டுகளை வாங்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2019-12-20 23:00 GMT
சேலம், 

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்து இருந்தார். மேலும் கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களை மூளை சலவை செய்து ஐ.எஸ்.இயக்கத்தில் சேர்த்து வந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் லியாகத் அலி வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆதாரங்கள் சிக்கின. மேலும் தலைமறைவாக இருந்த லியாகத் அலியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் லியாகத் அலி கேரளாவில் பதுங்கி இருந்ததை அறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கு சென்று, அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

லியாகத் அலிக்கு சேலத்தை சேர்ந்த இப்ராகிம் (வயது 24), அன்பரசன் (27), அப்துல்ரகுமான் (29) ஆகிய 3 பேர் போலி முகவரி கொடுத்து, சிம்கார்டுகளை வாங்கி கொடுத்துள்ளனர்.

அதாவது அப்துல்ரகுமான் செல்போன் கடை நடத்தி வந்ததும், அவரது கடையில் இருந்து 9 பேரின் போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டுகளை வாங்கியதும், அதனை கேரளாவில் பயங்கரவாதிகளுக்கு வழங்கியதும் தெரியவந்தது. இந்த சிம்கார்டுகளை குமரி மாவட்டம் திருவிதாங்கோடு அருகே உள்ள அடைப்புவிளை பாதர் தெருவை சேர்ந்த அப்துல்சலீம் (25), இளங்கடை பகுதியை சேர்ந்த சையது அலி நவாஸ் (25), கடலூரை சேர்ந்த காஜாமைதீன் (40) ஆகியோர் சேலம் வந்து அதனை வாங்கிக்கொண்டு, கேரளாவுக்கு சென்று உள்ளனர். பின்னர் அதனை அங்குள்ள லியாகத் அலியிடம் கொடுத்தனர். அவர் அந்த சிம்கார்டுகளை பயங்கரவாதிகளிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

சேலத்தில் வாங்கிச்சென்ற சிம்கார்டுகள் மூலமாகவே கேரளாவில் பதுங்கி இருந்த லியாகத் அலியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனிைடயே சையது அலி நவாஸ், காஜாமைதீன், அப்துல்சலீம் ஆகியோர் சேலத்தில் பதுங்கி இருப்பதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சேலம் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ேதடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சேலத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லியாகத் அலியின் கூட்டாளிகளான இவர்கள் 3 பேரும் நாகர்கோவில் வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ளனர். அவர்கள் இந்து தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் உஷார்ப்படுத்தப்பட்டு, ரெயில் நிலையங்கள், ரெயில்களில் சையது அலி நவாஸ், அப்துல்சலீம், காஜா மைதீன் ஆகியோரின் புகைப்படங்களை காண்பித்து பயணிகளிடம் விசாரித்து வருகிறார்கள்.

அவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் கட்டணமில்லா தொலைபேசி எண் 1512-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்தும் இந்த எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். சேலத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளதால், தமிழகத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்