ஊத்தங்கரை அருகே, கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி - விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊத்தங்கரை அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2019-12-20 22:15 GMT
ஊத்தங்கரை, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள திப்பம்பட்டியில் இருந்து கீழ்குப்பம் வரை செல்லும் சாலை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ. 74 லட்சம் மதிப்பீட்டில் டென்டர் விடப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப் பட்டது.ஆனால் இந்த பணி தொடங்கிய சில மாதங்களிலேயே பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் செல்லும் போது சாலையில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர்.

மேலும், இவ்வழியாக செல்லும் போது வாகனங்களும் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். வாகனங்கள் செல்லும் போது அதிகமாக புழுதி பறப்பதால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. குண்டும், குழியுமான சாலையால் அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது.

எனவே, கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்