பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட 2 மாணவர்கள் வகுப்பறைக்கு வந்ததால் பரபரப்பு - எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட 2 மாணவர்கள் வகுப்பறைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை எதிர்த்து மற்ற மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-20 22:00 GMT
சூலூர்,

கோவையை அடுத்த சூலூர் விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி வருபவரின் 2 மகன்கள் விமானப்படை வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர். அந்த 2 மாணவர் களையும் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதாக பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியைகள் மீது சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் பள்ளி முதல்வர் மற்றும் 3 ஆசிரியைகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மற்ற மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் புகார் கொடுத்த 2 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீது பள்ளி முதல்வர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து ஆசிரியைகள் மீது புகார் கொடுத்த 2 மாணவர்களையும் பள்ளியில் இருந்து நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. அந்த 2 மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ் விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் நகல் பள்ளியின் முன்புற கேட்டில் ஒட்டப்பட்டது. இந்தநிலையில் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அந்த 2 மாணவர ்களும் பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அங்கு முன்புற கதவு பூட்டப்பட்டு அதில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் பள்ளிக்கூடத்தின் பின்புற கதவு வழியாக வகுப்பறைக்குள் சென்றனர்.

பின்னர் அவர்கள், தங்கள் 2 பேரையும் ஆசிரியர்கள் அடித்து புத்தக பைகளை மைதானத்தில் வீசி விட்டதாக புகார் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவர்கள், பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட 2 மாணவர்களை பள்ளியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கூறி, வகுப்புகளை புறக்கணித்து, பள்ளி வளாகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கூடம் முன் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் 4 ஆசிரியர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் சென்று, பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட 2 மாணவர்கள் வந்தது குறித்து தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமை யிலான போலீசார் மற்றும் விமானப்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளி துணை ஆணையர் ராஜேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் இனிமேல் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.

போராட்டம் தீவிரம் அடைவது குறித்து விமானப்படையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த விமான படை போலீசார், அந்த 2 மாணவர்களையும் பள்ளியில் இருந்து அழைத்து சென்று விட்டனர். அந்த 2 மாணவர்களும் மீண்டும் பள்ளிக்குள் வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்ற மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர் கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்