திருவண்ணாமலை மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் 1,594 பேர் போட்டியின்றி தேர்வு - கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 1,594 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை.
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 860 கிராம ஊராட்சி பகுதிகளில் 3,520 வாக்குச்சாவடி மையங்களில் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
முதல் கட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம், தெள்ளார், பெரணமல்லூர் ஆகிய ஒன்றியங்களிலும், 2-வது கட்டத்தில் போளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு, செங்கம், புதுப்பாளையம், ஜவ்வாதுமலை, வந்தவாசி, ஆரணி, மேற்கு ஆரணி ஆகிய ஒன்றியங்களிலும் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 341 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 860 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும் மற்றும் 6,207 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை வருகிற 2-ந் தேதி காலை 8 மணிக்கு 18 மையங்களில் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள 3,520 வாக்குச்சாவடிகளில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளராக சுந்தரவல்லி தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு தேர்தல் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார். பொதுமக்கள் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் புகார்கள் குறித்து தேர்தல் பார்வையாளரின் 96777 78184 கைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
இந்த தேர்தலில் 8 லட்சத்து 5 ஆயிரத்து 233 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 21 ஆயிரத்து 899 பெண் வாக்காளர்களும், 78 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 16 லட்சத்து 27 ஆயிரத்து 210 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
முதல் கட்டத்தில் 4 லட்சத்து 27 ஆயிரத்து 379 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 37 ஆயிரத்து 826 பெண் வாக்காளர்களும், 54 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 8 லட்சத்து 55 ஆயிரத்து 259 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 2-ம் கட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 854 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 84 ஆயிரத்து 73 பெண் வாக்காளர்களும், 24 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 7 லட்சத்து 61 ஆயிரத்து 951 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 286 பதற்றமான வாக்குச்சாவடிகளும், 42 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளும் போலீசாரால் கண்டறியப்பட்டு உள்ளன. 286 பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் மற்றும் வீடியோ பதிவு மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. 42 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்து கண்காணிக்கப்பட உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தேர்தல் கண்காணிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
கட்டணமில்லா தொலைபேசி 18004253678 மற்றும் 04175-233303 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். ஊராட்சி தேர்தலுக்காக 40 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 1,105 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்காக ஒரு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குச்சாவடிகளுக்கு 7 அலுவலர்கள் வீதமும், 2 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்குச்சாவடிகளுக்கு 8 அலுவலர்கள் வீதமும் சுமார் 29 ஆயிரத்து 387 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
18 ஊராட்சி ஒன்றியங்களில் 18 பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என 7,442 பதவிகளுக்கு 22,150 வேட்பு மனுக்கள் பெற்றப்பட்டது. 241 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் போலி சான்றிதழ் மூலம் தாக்கல் செய்யப்பட்ட 5-க்கும் மேற்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட உள்ளது. 3,723 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது.
இவற்றில் 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 47 ஊராட்சி மன்ற தலைவர்கள், 1,544 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 16,592 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 1 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட வில்லை.
மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா ஒரு வாக்கு எண்ணும் மையம் வீதம் மொத்தம் 18 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் பேசி, அவர்கள் தேர்தலில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தல் எந்தவித பிரச்சினையுமின்றி சிறப்பாக நடைபெற மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.