குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கரூரில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கரூரில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-12-20 22:30 GMT
கரூர்,

கரூர் நகர அனைத்து இஸ்லாமிய ஜமாஅத்தார்கள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சின்ன பள்ளிவாசல் இமாம் முக்தாருல்லா தலைமை தாங்கினார். கரூர் கோவைரோடு ஈத்கா பள்ளிவாசல் இமாம் அன்வருதீன், தலைவர் நாசர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியிருப்பதில் மதத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது கண்டனத்துக்குரியதாகும். அதிலும் இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களுக்கு அதில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரான என்பதை விட இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

பொருளாதார நெருக்கடியில் இந்தியா தற்போது சிக்கி தவிக்கிறது. கியாஸ், பெட்ரோல்-டீசல் விலையுயர்வு என விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு செல்கிறது. ஜி.எஸ்.டி. போன்றவற்றால் வணிக நிறுவனங்கள் மூடும் நிலைக்கம், சிறு-குறு தொழில்கள் பாதிப்படைந்தும் வருகின்றன. இது போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசு அக்கறை காட்டாமல், மக்களை பிளவுபடுத்தும் வகையில் சட்டம் இயற்றுவது கண்டிக்கத்தக்கது ஆகும். எனவே குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின்போது, எங்களுடை சகோதரத்துவத்தை பிரிக்காதே... என்பன உள்ளிட்ட கோ‌ஷங்களை எழுப்பி மத்திய பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஜவகர்பஜார் பள்ளி வாசல் இமாம் அபுல்அசன், ஜாமியா பெரிய பள்ளி வாசல் தலைவர் தாஜூதீன் மற்றும் ஜபருல்லா உள்பட கரூர் நகர அனைத்து ஜமாஅத்தார்கள், முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்