விபசார கும்பலிடம் மீட்கப்பட்ட 2 வங்காளதேச பெண்கள் மீது வழக்கு - சட்ட விரோதமாக தங்கியதால் நடவடிக்கை
விபசார கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட 2 வங்காளதேச பெண்கள் மீது, சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாகூர்,
கிருமாம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிருமாம்பாக்கம் போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து சோதனை நடத்தினர்.
அங்கு விபசார புரோக்கர்களாக செயல்பட்ட தமிழக பகுதியான ரெட்டிச்சாவடியை அடுத்துள்ள கீழ் அழிஞ்சிப்பட்டை சேர்ந்த தனுசு, அவரது சகோதரர் வடலூர் சேராக்குப்பத்தை சேர்ந்த கெவின் என்ற செல்வம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த மணிகண்டன், வளவனூர் குமாரக்குப்பத்தை சேர்ந்த சாந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டு புதுச்சேரி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட இளம் பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் என தவறான தகவலை தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் அவர்கள்வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், அழகு நிலைய வேலைக்காக என்று கூறி அவர்களை அழைத்து வந்து, விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்தது.
விசா போன்ற எந்தவித ஆவணங்களும் இல்லாமல், இந்தியாவுக்குள் நுழைந்து சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்காளதேச இளம்பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய அனுமதி கேட்டு கிருமாம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், புதுவை நீதிமன்றத்தில் மனு செய்தார்.
நீதிமன்ற உத்தரவின்பேரில், காப்பகத்தில் தங்கியுள்ள வங்காளதேச பெண்கள் மீது தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.