பொதுப்பணித்துறை பொறியாளர் மீது தாக்குதல்: ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் - வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

பொதுப்பணித்துறை பொறியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-12-19 23:01 GMT
புதுச்சேரி, 

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு பொறுப்பேற்றது முதல் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அமைதி தவழ்ந்த மாநிலம் அமைதியின்றி ரவுடிகளாலும் வெடிகுண்டு கலாசாரத்தாலும் சிக்கி சீரழிந்து வருகிறது.

பொதுப்பணித்துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரியான பொறியாளர் செல்வராஜ் ஒப்பந்ததாரர்களின் தூண்டுதலால் மர்ம கும்பலால் தாக்கப்பட்டு உள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

குற்றம் செய்ய தூண்டிய ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் அரசு பணியில் ஈடுபடும் ஊழியர்கள், அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வழிவகுக்கும்.

தாக்குதலுக்குள்ளான செல்வராஜ் தலைமை செயலாளருக்கு புகார் அளித்தும் ஒப்பந்ததாரர் மற்றும் அவருக்கு துணையாக செயல்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தாக்குதல் நடத்த தூண்டிய ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்துசெய்து பணிகளை வேறு ஒப்பந்ததாரருக்கு வழங்கவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கை யில் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்