பனப்பாக்கம் அருகே, முன்விரோத தகராறில் தாய், மகன் மீது தாக்குதல் - விவசாயி கைது; 3 பேருக்கு வலைவீச்சு

பனப்பாக்கம் அருகே முன்விரோத தகராறில் தாய் மற்றும் மகனை தாக்கியது தொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-12-19 22:15 GMT
பனப்பாக்கம்,

பனப்பாக்கத்தை அடுத்த நங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 27). இவரது குடும்பத்துக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் விவசாயி முனுசாமி (51) குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு வினோத்குமாரின் தாயார் மஞ்சு வீட்டின் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த முனுசாமி தகாத வார்த்தைகளால் மஞ்சுவை திட்டி உள்ளார். அதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முனுசாமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் கணேசன், மகேஸ்வரி, மீனா ஆகியோர் உருட்டுக்கட்டையால் மஞ்சுவை சரமாரியாக தாக்கினர். இதனை கண்ட வினோத்குமார் அதனை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் முனுசாமி உள்ளிட்ட 4 பேரும் தாக்கினார்கள்.

இதில் படுகாயம் அடைந்த மஞ்சு, வினோத்குமாரை அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்கு பின்னர் இருவரும் சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வினோத்குமார் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிந்து முனுசாமியை கைது செய்தார். மேலும் இதில் தொடர்புடைய கணேசன், மகேஸ்வரி, மீனா ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்