சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா - நாளை தொடங்குகிறது
சுற்றுலாத்துறை சார்பில் இந்திய நாட்டியவிழா மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது. இந்த விழா ஒரு மாதம் நடக்கிறது.
மாமல்லபுரம்,
மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகளை கவரும் வகையில் ஒரு மாதம் நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி ஒரு மாதம் நடைபெறுகிறது. மாமல்லபுரம் கடற்கரை சாலையில் உள்ள நுழைவு வாயில் அருகில் திறந்தவெளி மேடையில் நாளை மாலை 5½ மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.
விழாவிற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமை தாங்குகிறார். சுற்றுலாத்துறை ஆணையர் அமுதவள்ளி வரவேற்று பேசுகிறார். சுற்றுலாத்துறை செயலாளர் அசேக் டோங்ரோ முன்னிலை வகித்து பேசுகிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நாட்டிய விழாவை தொடங்கி வைத்து பேசுகின்றனர்.
முடிவில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் நன்றி கூறுகிறார். விழா நாட்கள் முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் பரதநாட்டியம், ஒடிசி, கதகளி, குச்சுபுடி, மோகினியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவிற்கான திறந்த வெளி மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விழாவில் அமெரிக்கா, சீனா, கனடா, பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பயணிகள் அதிகமானோர் கலந்து கொண்டு ஒரு மாத நிகழ்ச்சியை கண்டுகளிக்க உள்ளனர். ஒரு மாத விழாவை முன்னிட்டு மாமல்லபுரம் இ.சி.ஆர். நுழைவு வாயில் பல்லவன் சிலை அருகில் சுற்றுலாத்துறை சார்பில் வரவேற்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 1 மாத விழாவை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில் நுழைவு வாயில் பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளாச்சிக்கழகம் சார்பில் விழாவை கண்டுகளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மலிவு விலை உணவகமும் நாளை திறக்கப்பட உள்ளது.