குடிமராமத்து பணிகள் மூலம் ‘சூல்' நாவலின் மையக்கருத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி உள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

‘சூல்‘ நாவலின் மையக்கருத்தான குடிமராமத்து பணிகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2019-12-19 22:30 GMT
கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள உருளைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சோ.தர்மன் (வயது 66). இவர் எழுதிய ‘சூல்‘ நாவலுக்காக, இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று மாலையில் கோவில்பட்டி வ.உ.சி. நகரில் உள்ள சோ.தர்மனின் வீட்டுக்கு சென்று, அவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தக பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது பெருமையாக உள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஏற்கனவே எழுத்தாளர் சோ.தர்மனுக்கு 2 விருதுகளை வழங்கி உள்ளது. அவருக்கு அகவை முதிர்ந்த தமிழறிஞர் என்ற விருதும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் மாதந்தோறும் ரூ.3,500 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மனுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்ததுடன், அவரை தொலைபேசியிலும் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி பாராட்டினார்.

கிராமங்களில் நீர்நிலைகளை மேம்படுத்த வேண் டும். இயற்கை மண்வளத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும், ‘சூல்‘ நாவலின் மையக்கருத்தான குடிமராமத்து பணிகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி உள்ளது. இதனால்தான் 80 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருந்த மேட்டூர் அணை முதல் அனைத்து நீர்நிலைகளும் தற்போது தூர்வாரப்பட்டு உள்ளது.

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையும் நன்றாக பெய்ததால், அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை சராசரி விகிதத்தைக் காட்டிலும் 30 சதவீதத்துக்கும் அதிகமாக பெய்துள்ளது. இதனால் அனைத்து குளங்களும், கண்மாய்களும் நிரம்பியதைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. மழைநீரை வீணாக்காமல் சேமிக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. ‘சூல்‘ நாவலின் மையக்கருத்தும் இதனை வலியுறுத்துவது பொருத்தமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்