நடுரோட்டில் போலீஸ் ஏட்டை தாக்கிய வாலிபர்கள் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருவதால் போலீசார் அதிர்ச்சி

ஒரத்தநாடு அருகே நடுரோட்டில் போலீஸ் ஏட்டை வாலிபர்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருவதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2019-12-19 23:15 GMT
ஒரத்தநாடு,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் திருவோணம் போலீஸ் சரக பகுதியில் வெளிச்சந்தையில் மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் ஏட்டு செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் நேற்று திருவோணத்தை அடுத்துள்ள புதுவிடுதி ஆற்றுபாலம் அருகே பட்டுக்கோட்டை-செங்கிப்பட்டி பிரதான சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்

அப்போது அங்கு குடிபோதையில் இருந்த 2 வாலிபர்களுக்கும், போலீஸ் ஏட்டு செந்தில்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வாலிபர்களும், போலீஸ் ஏட்டும் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் செந்தில்குமாரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

வாட்ஸ் அப்பில் பரவுவதால் போலீசார் அதிர்ச்சி

இந்த சம்பவத்தை சாலையில் சென்றவர்கள் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பட்டப்பகலில் பிரதான சாலையில் போலீஸ் ஏட்டை வாலிபர்கள் சரமாரியமாக தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் வாட்ஸ்- அப் மற்றும் இணையதளத்திலும் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் செய்திகள்