உள்ளாட்சி தேர்தலில் மட்டும் மலைவாழ் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுப்பு
உள்ளாட்சி தேர்தலில் மட்டும் வாக்களிக்கும் உரிமை தங்களுக்கு மறுக்கப்படுவதாக உடுமலை அமராவதி வனப்பகுதியில் வசித்து வரும் மலைவாழ்மக்கள் தெரிவித்துள்ளனர்.
தளி,
பரந்து விரிந்த மேற்குதொடர்ச்சி மலைத்தொடர். அதில் ஒரு சிறு பகுதி ஆனைமலை புலிகள் காப்பகம். வானுயர்ந்த மரங்கள், வளர்ந்து நிற்கும் செடிகள், சில்லென்றகாற்று பசுமைபோர்த்திய புல்வெளிகள், யானையின் பிளிறல், புலியின் உறுமல், கூச்சலிடும் குருவிகள், ஆர்ப்பரிக்கும் ஆறுகள். இவற்றுக்கு நடுவே போராட்டம் நிறைந்த வாழ்க்கை.
ஒற்றை தகரத்தில் வேய்ந்த கூரையில் மூங்கில்களை சுற்றுச்சுவராக கொண்ட குடிசையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் திகில் நிறைந்த நிமிடங்களாய் கரைகிறது மலைவாழ்மக்களின் ஒவ்வொரு மணித்துளியும். பொழுது விடிந்தால் தான் தெரியும் அந்தி சாய்ந்தால் தான் தெரியும் யார் யார் உயிரோடு இருக்கிறார்கள் என்று. அந்த அளவுக்கு நிரந்தரமற்ற வாழ்க்கை. பிறப்பும் இருளில், இறப்பும் இருளில் வாழ்க்கையாவது பிரகாசிக்குமா? என்றால் அதுவும் அமாவாசை இருளாய் வெளிச்சம் இல்லாமல்.
கடந்த காலம் எப்படி இருந்ததோ அப்படியே உள்ளது இன்றும்.ஆனால் இன்று கடும் கட்டுப்பாடுகள். இங்கு எந்தவொரு செயலுக்கும் வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு உயிரை கையில் பிடித்துக் கொண்டு அடிவாரத்தை நோக்கி பயணிக்க வேண்டும். பாதை இல்லா பாதையில்... வெளிஉலக தொடர்பு கிடையாது. ஆனால் அபரிமிதமான ஆரோக்கியம் உண்டு. காரணம் ராகி, தினை, சாமை, கப்பக்கிழங்கு, சக்கரைவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட உணவுகளால். மனஅழுத்தம் ரத்த அழுத்தம், சுவாச குறைபாடு என எந்த வியாதியும் இல்லை.
பிரசவம், எதிர்பாராத விபத்து, தொற்று நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை பெறமுடியாது. ஆஸ்பத்திரிக்கு வருவதற்குள் அகாலமரணம் பரிசாக கிடைத்து விடும். எந்தவொரு தேவையையும் போராடித்தான் பெறவேண்டுமே தவிர தானாக கிடைக்காது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அவரவருக்கு பிடித்த அரசியல் கட்சிபிரதிநிதிகளை தேர்தல் மூலம் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. அதுபோல் மலைவாழ் மக்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலின் போதும் வாக்களித்தனர்.
இந்த நிலையில் உள்ளூர் மக்களின் அடிப்படை தேவையை முதலில் பூர்த்தி செய்வது உள்ளாட்சி அமைப்புகளே. இந்த அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் உள்ளது. இந்த அதிகார அமைப்பிடம் உரிமையை பெற வேண்டும் என்றால் முதலில் அந்தந்த பகுதி மக்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும். ஆனால் மலையில் வாழும் மக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த நிலையில் அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் மட்டும் வாக்களிக்கும் உரிமை மறுத்து இருப்பது கவலை தருவதாகும்.
இது குறித்து உடுமலை அமராவதி வனப்பகுதியில் வசித்து வருகின்ற மலைவாழ்மக்கள் கூறியதாவது:-
உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக பகுதிகளில் உள்ள ஆட்டுமலை, பொறுப்பாறு, கோடந்தூர், மேல்குருமலை, பூச்சக்கொட்டான்பாறை, கருமுட்டி, திருமூர்த்திமலை, ஈசல்திட்டு, மாவடப்பு குழிப்பட்டி, காட்டுப்பட்டி, குருமலை, கரட்டுபதி, தளிஞ்சி, தளிஞ்சிவயல் உள்ளிட்ட குடியிருப்புகளில் வசித்து வருகிறோம். விவசாயத்தை பிரதான தொழிலாகவும், ஆடு, மாடு வளர்ப்பு, தேன்எடுத்தல், வனப்பகுதியில் இயற்கையாக விளைகின்ற பொருட்களை பறித்து விற்பனை செய்தல், தைலம் காய்ச்சுதல் உள்ளிட்ட சுயதொழில்களையும் செய்து வருகின்றோம்.
ஆனாலும் பல்வேறு விதமான இடர்பாடுகளால் விவசாயத்திலும் சுயதொழிலிலும் பெரிதளவில் வருமானம் ஈட்ட முடியவில்லை. விளைபொருட்களை சேமித்து வைத்து பயன்படுத்தலாம் என்றால் வனப்பகுதியில் நிலவுகின்ற முறையற்ற தட்பவெப்ப நிலைமாற்றத்தால் விரைவில் கெட்டு விடுகிறது.
அதுமட்டுமின்றி விவசாயத்திற்கான நிலமும் உடனே கிடைக்காது. கிடைத்தாலும் கலப்பை எடுத்து உடனே உழுதுவிடவும் முடியாது. கரடு முரடான பகுதிகளை களைந்து, மேடு பள்ளங்களை சமன் செய்வதற்கு பலமாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அதன் பின்பு தான் விவசாயத்தில் ஈடுபட முடியும். அதுவும் எத்தனை நாட்களுக்கு என்றால் ஆறுகளில் நீர்வரத்து இருக்கும் வரையில் தான் . அதன் பின்பு குடிப்பதற்கு, குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்காது. கிடைக்கின்ற தண்ணீரை வைத்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருமானத்தை பார்க்கலாம் என்றால் பொருட்களை விளைவிக்க முடியும். சந்தை படுத்துதல் உரிய விலை கிடைக்காதது, வனவிலங்குகளால் சேதம் உள்ளிட்ட காரணங்களினால் அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியாது.
எங்களது வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதற்கான ஒரேவழி அடிப்படை உரிமை பெற்றே தீருவது தான். சட்டமன்றம், நாடாளுமன்றம் தேர்தலில் வாக்களிக்கும் எங்களுக்கு உள்ளாட்சியில் மட்டும் வாக்களிக்கும் உரிமை வலுக்கட்டாயமாக மறுக்கப்படுகிறது.
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளை பெறும் உரிமை எங்களுக்கும் உண்டு. ஆனால் மாற்றந்தாய் மனப்பான்மை கொண்ட அதிகாரிகளால் எங்களுடைய வாழ்வாதாரம் பறி போகிறது. அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு தகுதி அற்றவர்களா நாங்கள். நியாயப்படி பார்த்தால் அனைத்து அடிப்படை தேவைகளையும் நலத்திட்டங்களையும் வனப்பகுதியில் வசிக்கின்ற எங்களுக்கே முதலில் வழங்க வேண்டும். காரணம் மழை, வெயில், வறட்சி, குளிர் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் முதலில் எங்களைத்தான் தாக்குகிறது. முறையான பராமரிப்பு இல்லாதலால் சோலார்பேனல், சாணஎரிவாயு, நீர்மின் உற்பத்தி உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்ட ஒரு சில மாதங்களில் முடிவுக்கு வந்து விடுகிறது.
அதுமட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசு அறிவிக்கப்படுகின்ற பெரும்பாலான நலத்திட்டங்கள் எங்களுக்கு கிடைப்பதில்லை. எனவே உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை அரசு எங்களுக்கு வழங்க வேண்டும். இதனால் எங்களின் வாழ்வாதாரம் உயரும். பொருளாதாரத்திலும் ஏற்றமும் காண முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
உடுமலை வனச்சரக பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மாவடைப்பு, கோடந்தூர் மற்றும் திருமூர்த்தி நகர் ஆகிய சாவடிகளும், அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சியிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த 4 வாக்குச்சாவடிகளில் 1158 பெண் வாக்காளர்கள் உள்பட 2 ஆயிரத்து 246 வாக்காளர்கள் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் மாவடப்பில் 71 சதவிகிதமும், திருமூர்த்திநகரில் 67 சதவிகிதமும், கோடந்தூரில் 87 சதவிகிதமும், தளிஞ்சியில் 78 சதவிகித வாக்குகளும் ஆக மொத்தம் 4 வாக்குச்சாவடிகளில் சராசரியாக 74 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. மலைவாழ்மக்கள் தங்களது ஜனநாயக கடமையை சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.
எனவே உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்கு உரிமை அளித்தால் ஆர்வத்துடன் அந்த கடமையை நிறைவேற்றி உரிமைகளை பெறுவதற்கும் மலைவாழ்மக்கள் தயாராக உள்ளனர்.