வெங்காய சம்பல் தராததால் ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல் - தொழிலாளி கைது

ஆலங்குளத்தில் வெங்காய சம்பல் தராததால் ஓட்டல் ஊழியரை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2019-12-19 22:30 GMT
ஆலங்குளம், 

வெங்காயத்தை உரித்தால் தான் இல்லத்தரசிகளுக்கு கண்ணீர் வரும், ஆனால் தற்போது விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது. அந்த அளவுக்கு வெங்காய விலை உயர்ந்து உள்ளது. இதனால் வெங்காயம் திருட்டு, செல்போன் வாங்கினால் வெங்காயம் இலவசம், மணமக்களுக்கு வெங்காயம் பரிசு என்று பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது வெங்காய சம்பல் தராததால் ஓட்டல் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் விக்கிரமசிங்கம் (வயது 50), தொழிலாளி. இவர் ஆலங்குளம் பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா சாப்பிட சென்றார். அப்போது அவருக்கு அருகில் அமர்ந்து இருந்தவர், வெங்காய சம்பலுடன் பிரியாணி சாப்பிட்டார்.

அப்போது விக்கிரமசிங்கம், ஓட்டல் ஊழியர் குறிப்பன்குளத்தை சேர்ந்த சந்திரசேகரிடம் (40) சம்பல் கேட்டார். அதற்கு அவர், வெங்காய விலை உயர்வு காரணமாக பிரியாணிக்கு மட்டும் தான் சம்பல் வழங்க இயலும், புரோட்டாவுக்கு வழங்க இயலாது என்று கூறி உள்ளார்.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த விக்கிரமசிங்கம், சந்திரசேகரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்திரசேகர் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்கிரமசிங்கத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்