ஊஞ்சலூர் அருகே வாய்க்காலில் பிணமாக கிடந்த தையல் தொழிலாளி; போலீசார் விசாரணை
ஊஞ்சலூர் அருகே வாய்க்காலில் தையல் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊஞ்சலூர்,
ஊஞ்சலூரை அடுத்த பாசூர் காலிங்கராயன் வாய்க்கால் மதகின் அருகில் வாயில் நுரை தள்ளியபடி ஆண் பிணம் கிடப்பதாக மலையம்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர் திருப்பூர் மாவட்டம் கனக்கம்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் (வயது 54). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி. இவருக்கு உடல் நலம் சரியில்லை.
இதனால் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று முன்தினம் காலையில் வீட்டை விட்டு சென்றார். இந்த நிைலயில் பாசூர் காலிங்கராயன் வாய்க்கால் மதகு பகுதியில் இறந்து கிடந்தது’ தெரியவந்தது.
ஆஸ்பத்திரிக்கு போவதாக கூறிவிட்டு சென்ற அவர் எதற்காக இ்ங்கு வந்தார்? விஷம் குடித்து தற்கொைல செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.