கூடலூர் அருகே பரிதாபம், ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் பலி

கூடலூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் பலியானார்கள்.

Update: 2019-12-19 22:00 GMT
கூடலூர்,

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிஜூலால் (வயது 20). இவர் நேற்று வயநாடு பகுதிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி பிஜூலால் மற்றும் அதேப்பகுதியை சேர்ந்த ஜிவின் (21), நிதின் (23) மற்றும் சிலருடன் ஒரு காரில் வயநாடுக்கு வந்தனர்.

அவர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கேரளா மாநிலத்துக்கு உள்பட்ட மேப்பாடியை அடுத்த சோழமலை பொன்குன்னம் பகுதியில் செல்லும் ஆற்றை ரசித்து கொண்டிருந்தனர்.

அப்போது பிஜூலால், ஜிவின், நிதின் ஆற்றில் குளிக்க விரும்பினர். இதைத்தொடர்ந்து அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

இதனால் அவர்கள் 3 பேரும் ஆற்றில் மூழ்கி னர். இதனை கவனித்த அவர்களுடன் வந்தவர்கள் கரையில் நின்றபடி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அங்கு நின்ற நீச்சல் தெரிந்த வாலிபர்கள் சிலர் ஆற்றில் குதித்து, மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இதுபற்றி மேப்பாடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆற்றில் மூழ்கிய வாலிபர்களை தேடும் பணியை துரிதப்படுத்தினார்கள். இந்தநிலையில் வாலிபர்கள் குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில், அவர்கள் 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து போலீசார், பிஜூலால், ஜிவின், நிதின் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தப்பகுதியில் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மேப்பாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். 3 வாலிபர்கள் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், வயநாடுக்கு சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் குளித்த போது நீரில் முழ்கி 3 பேர் இறந்து விட்டனர். அவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரே முழு விவரமும் தெரிய வரும் என்றனர்.

மேலும் செய்திகள்